Published : 06 Jan 2023 02:31 PM
Last Updated : 06 Jan 2023 02:31 PM

பரஸ்நாத் மலையை சுற்றுலாத் தலமாக அறிவித்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை திரும்பப் பெறுக: அன்புமணி ராமதாஸ்

கோப்புப்படம்

சென்னை: "ஜார்க்கண்ட் மாநில அரசு பரஸ்நாத் மலையை சுற்றுலாத் தலமாக அறிவித்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை ஜார்க்கண்ட் அரசு திரும்பப் பெற வேண்டும். அதன் மூலம் சமணர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "ஜார்க்கண்ட் மாநிலத்தின் பரஸ்நாத் மலையில் உள்ள சமணர்களின் புனித கோயில் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக மாற்றும் முடிவை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள சமணர்கள் கடந்த சில நாட்களாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமணர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது: அது கைவிடப்பட வேண்டும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிருதிஹ் மாவட்டத்தில் பரஸ்நாத் மலைத் தொடர் உள்ளது. 1366 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலை தான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய மலை ஆகும். இந்த மலையின் உச்சியில் சமணர்களின் புனித கோயிலான சம்மேத ஷிகார்ஜி கோயில் உள்ளது. அக்கோயில் உள்ளிட்ட மலைப்பகுதியை சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவித்து கடந்த 2019-ஆம் ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், சமணர்களின் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் தான், அதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள சமணர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையிலும் சமணர்கள் இன்று பேரணி நடத்தியிருக்கின்றனர்.

சமணர்களின் உணர்வுகள் நியாயமானவை; அவை மதிக்கப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். பரஸ்நாத் மலையில் உள்ள ஷிகார்ஜி கோயிலில் சமணர்கள், அந்த சமுதாய குருக்களின் வழிகாட்டுதலின்படி ஒழுங்கையும், தூய்மையையும் கடைபிடித்து தான் வழிபாடு நடத்துவார்கள். எறும்புகளுக்குக் கூட எந்த தீங்கும் இழைத்து விடக் கூடாது என்பது தான் சமணர்களின் கொள்கை ஆகும். அதை அவர்கள் எந்த சமரசமும் இல்லாமல் பின்பற்றி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநில அரசின் திட்டப்படி பரஸ்நாத் மலை சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஷிகார்ஜி கோயில் உள்ள பகுதியில் மது அருந்தி விட்டு, புலால் உணவுகளை உண்ணக்கூடும் என்றும், அது அந்த கோயிலின் புனிதத்தை கெடுத்து விடும் என்றும் சமணர்கள் அஞ்சுகின்றனர். அவர்களின் அச்சமும், கவலையும் நியாயமானவை. அவை மதிக்கப்பட வேண்டும்.

சமணர் அமைப்புகளின் பிரதிநிதிகளை இது தொடர்பாக அழைத்துப் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், பரஸ்நாத் மலையில் சுற்றுலா தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் தடை செய்து ஆணையிட்டிருக்கிறார். அந்த ஆணையை செயல்படுத்தும்படி ஜார்க்கண்ட் மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் சிக்கலுக்கான தீர்வாகத் தோன்றுகிறது.

எனவே, பரஸ்நாத் மலையை சுற்றுலாத் தலமாக அறிவித்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை ஜார்க்கண்ட் அரசு திரும்பப் பெற வேண்டும். அதன் மூலம் சமணர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x