Published : 06 Jan 2023 01:49 PM
Last Updated : 06 Jan 2023 01:49 PM

கடைசி ஓவரை தானே வீசி பாண்டியாவுக்கு பாடம் கற்பித்த ஷனகா... அர்ஷ்தீப் சிங்கின் 'நோ பால்'கள் - ஓர் அலசல்

முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரை தான் வீசாமல் அக்சர் படேலிடம் கொடுத்து தப்பித்த ஹர்திக் பாண்டியா, 2-வது டி20 போட்டியிலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் படியாக 2 ஓவர்களை மட்டுமே வீசி 4 ஒவர்களை பூர்த்தி செய்யாமல் விட்டார். இதனால் மற்ற பவுலர்கள் செம அடி வாங்கியதில் இந்தியா தோற்றது. மாறாக, இலங்கை கேப்டன் ஷனகா கடைசி ஓவரில் இந்தியாவுக்கு தேவை 20 ரன்கள் என்ற நிலையில், தானே வீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெறும் 4 ரன்களையே கொடுத்து வெற்றி பெறச் செய்தார்.

ஹர்திக் பாண்டியா போன்ற ஐபிஎல் கேப்டன்களை தேசிய அணிக்குக் கேப்டனாக்கினால் இப்படித்தான் ஆகும். அவர் ஏன் பந்து வீச தயங்குகிறார்? காயம் ஏற்படும் பயம்தான். காயம் ஏற்பட்டுவிட்டால் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஆட முடியாமல் போய் விடுமே? அதுதான் ஹர்திக் பாண்டியாவின் கவலை. 14-வது ஓவர் முடிவில் இலங்கை 113/4. கடைசி 6 ஓவர்களில் 83 ரன்கள். இலங்கை கேப்டன் ஷனகா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 56 ரன்களை விளாசித் தள்ளினார். ஸ்கோர் 113/4-லிருந்து 206 ரன்களுக்குச் சென்றது.

இந்தக் காலக்கட்டங்களில் ஹர்திக் பாண்டியா வெறும் பாடி லாங்குவேஜ் காட்டிக் கொண்டிருந்தாரே தவிர தான் காயமடைந்தாலும் பரவாயில்லை அணிக்காக வீசுவோம் என்று நினைக்கவில்லை என்பதுதான் அவரது சுயநலம் பற்றிய கேள்விகளை நமக்கு எழுப்புகிறது. 2 ஓவர் 13 ரன்களையே கொடுத்த ஹர்திக் பாண்டியா, ஏன் பயப்படுகிறார்? ஒன்று காய பயம், ஐபிஎல் ஆட முடியாமல் போனால் “பேரிழப்பு” ஆயிற்றே! இன்னொன்று கடைசியில் வீசி அடி வாங்கிவிட்டால், தன் மார்க்கெட் வேல்யூ குறையுமே, பாவம் ஹர்திக் பாண்டியாவுக்குத்தான் எத்தனை பிரச்சினை?!

பேட்டிங்கிலும் 12 பந்துகளைச் சந்தித்தார் 15 ரன்களில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி. ஆக 2 பந்துகளில் 10 ரன்கள் வந்துவிட்டது. மீது 10 பந்துகளில் 5 ரன்களையே அவர் எடுத்திருக்கிறார், டி20 கிரிக்கெட்டில் ஸ்மார்ட் ஸ்ட்ரைக் ரேட்டை இப்படித்தான் பார்க்க வேண்டும். மாறாக, இலங்கை கேப்டன் ஷனகா பேட்டிங்கில் 22 பந்துகளில் 56 விளாசியதோடு பவுலிங்கில் கடைசி ஓவரை கேப்டனாகப் பொறுப்பேற்றுக் கொண்டு வீசி அக்சர் படேல், ஷிவம் மாவியை வீழ்த்தி வெற்றி பெறச் செய்தார். ஏன் ஷனகா நினைத்திருந்தால் ஒரு ஓவர் மீதமுள்ள ஹசரங்காவிடம் கொடுத்து எங்கள் வீரர்களை நாங்கள் இதற்குத் தயார் செய்கிறோம் என்று ஒரு பிதற்றல் பேட்டியும் கொடுத்திருக்கலாமே! அவர் செய்யவில்லை.

இதுதான் ஹர்திக் போன்றோருக்கும் ஷனகா போன்றோருக்கும் உள்ள வித்தியாசம். தோனி எத்தனைப் போட்டிகளில் பொறுப்பை தன் தலையில் சுமந்து ஃபினிஷ் செய்து கொடுத்துள்ளார். கோலி எத்தனை போட்டிகளில் வென்று கொடுத்துள்ளார். ஒரு ஆல்ரவுண்டர் தொடர்ந்து தன் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது, அதுவும் ஒரு கேப்டனாக என்பது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தோனியை விட சாதித்தவர் போல் ஹர்திக் பாண்டியா உடல் மொழியால் நாடகீயப் படுத்துகிறாரே தவிர, அவரிடம் உண்மையில் கேப்டன்சிக்கான திறமையும் இல்லை, ஸ்பிரிட்டும் இல்லை. அர்ஷ்தீப் சிங்கின் நோபால்களை ‘கிரைம்’ என்று வர்ணிக்கும் ஹர்திக் பாண்டியா, தான் வீசாமல் பொறுப்பைத் தட்டி கழிப்பதை என்னவென்று சொல்வது?

அர்ஷ்தீப் சிங்கின் நோ-பால்கள்! - முதலில் இந்திய அணித் தேர்வுக் குழப்பங்களை திராவிட் விளக்குவாரா என்பதை அவரிடம் ஒரு கறாரான பேட்டி மூலம் கேட்க வேண்டும், அணியில் ஏன் சிராஜ் இல்லை, குல்தீப் யாதவ் இல்லை? ஏன் உம்ரன் மாலிக் போன்ற அதிவேக பவுலரிடம் புதிய பந்தில் வீச கொடுப்பதில்லை? செஹல் சொல்லி சொல்லி அடிவாங்கினாலும் அணியில் நீடிப்பதென்ன மாயம்! 8 விக்கெட்டுகளையும் 40 ரன்களையும் எடுத்த குல்தீப் யாதவ் ‘உட்கார’ வைக்கப்படுவதன் முடிவை யார் எடுக்கிறார்கள்? அணியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? யாரேனும் விளக்குவார்களா? கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள் புள்ளி விவர மாயையில் உழல்கின்றனர்.

அர்ஷ்தீப் சிங் நவம்பர் 2022-ல் கடைசியாக ஆடினார், அவர் உடல் நலம் சரியில்லாத நிலையிலிருந்து மீண்டும் வரும் வேளையில் அவரை ஏன் அணியில் எடுக்க வேண்டும். ஏன் பார்மில் உள்ள சிராஜ் உட்கார வைக்கப்பட வேண்டும்? அர்ஷ்தீப் சிங்கின் பெரிய பிரச்சனை நோ-பாகல் என்பது தெரியாமலா ராகுல் திராவிட்டும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அணியைத் தேர்வு செய்கின்றனர். அவர் அறிமுகமான நாள் முதல் நேற்று வீசிய 5 நோ-பால்கள் உட்பட 14 நோ-பால்களை டி20-யில் வீசியிருக்கிறார் அர்ஷ்தீப் சிங்.

நேற்று குசல் மெண்டிஸ் வீறு கொண்டு எழுந்து வீறு வீறு என்று வீறக் காரணமே அர்ஷ்தீப் சிங்கின் நோ-பால்கள்தான். 2-வது ஓவர் கடைசி பந்தின்போது இலங்கை 7/0 என்றுதான் இருந்தனர். மெண்டிஸ் டொடர்ந்து பீட்டன் ஆகிக் கொண்டிருந்தார், அப்போது கொண்டு வந்து 3 நோ-பால்களை வரிசையாக வீசினார் அர்ஷ்தீப், மெண்டிஸ் ஃப்ரீ ஹிட்டில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்து டச்சிற்கு வந்தார் அந்த ஓவரிலேயே 19 ரன்கள்.

இதனையடுத்து, அடுத்த ஓவரை அவருக்கு பாண்டியா கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் நிலையில் முக்கியமான கட்டத்தில் 19-வது ஓவரை அவரிடம் கொடுக்கலாமா? இந்த முறை இவர் வீசிய பந்தில்ல் ஷனகா கேட்ச் ஆனார், ஆனால் அது நோ-பால். இது 4-வது நோ-பால். அப்போது ஷனகா 14 பந்துகளைச் சந்தித்து 30 ரன்களை எடுத்து செம டச்சில் இருந்தார். அவருக்கு நோ-பால் மூலம் வாழ்வு கொடுத்தார் அர்ஷ்தீப். அடுத்த 8 பந்துகளில் 22 ரன்களை விளாசி ஸ்கோரை 200 ரன்களைத் தாண்டச் செய்தார் ஷனகா.

19வது ஓவருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா அனுபவமற்ற உம்ரன் மாலிக்கை வீச அழைத்தார், அவரது யார்க்கர்கள் இன்னும் கூர்மையடையவில்லை. இதனால் செம சாத்து வாங்கி அந்த ஓவரில் 21 ரன்களை அவர் விட்டுக் கொடுத்தார். உம்ரன் மாலிக்கை பவர் ப்ளேயில் 2 ஓவர்கள் பிறகு 10வது ஓவருக்குள் 1 ஓவர், 12வது 1 ஓவர் என்று முடித்து விட வேண்டும், இல்லையெனில் ரன் கொடுக்கிறாரா, மாற்று பவுலர்களைப் பயன்படுத்த வேண்டும் இதெல்லாம் கேப்டன்சியின் அரிச்சுவடி.

ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு தெரியாது போலும்!! பவுலர்களே பெஞ்சில் இல்லாதது போல் உடம்பு சரியில்லாதவரை அணியில் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதே நம் கேள்வி. இப்படி எத்தனையோ கேள்விகள் ராகுல் திராவிட் பயிற்சிப் பொறுப்பேற்ற பிறகு நமக்கு எழவே செய்கிறது, பிசிசிஐ தலைமைக்கு எழுமா? தெரியவில்லை இருவருமே கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் டெஸ்ட் தொடரில் ராகுல் திராவிட்டின் பயிற்சித் திறமை கடும் கேள்விக்குரியதாகும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x