Published : 05 Jan 2023 05:44 AM
Last Updated : 05 Jan 2023 05:44 AM
சென்னை: சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கடந்த 31-ம் தேதி இரவு திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் திமுக எம்எல்ஏ பிரபாகர ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, 22 வயது பெண் காவலரிடம் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சாலிகிராமம் மதியழகன் நகர் எஸ்.பிரவீன்(23), விருகம்பாக்கம் சின்மயா நகர் சி.ஏகாம்பரம்(24) ஆகியோர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் கதறி அழுதார். அங்கிருந்த சக காவலர்கள் இதை தட்டிக் கேட்டுள்ளனர். அங்கு வந்த விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர், பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றார்.
அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் போலீஸாரை தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேடையில் இருந்து இறங்கி வந்த எம்எல்ஏ பிரபாகர ராஜா, பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவர் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல், அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், காவல் துறை மற்றும் தமிழக அரசுக்கும் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து, கோயம்பேடு காவல் துணை ஆணையர் குமார் முன்னிலையில், பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கூட்ட நெரிசலில் தெரியாமல் கைபட்டுவிட்டதாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், இதற்காக பெண் காவலரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் கடிதம் எழுதிக் கொடுத்தனர். பெண் காவலரும் தனது புகார் மீது மேல்நடவடிக்கை தேவையில்லை என்று எழுதிக் கொடுத்ததாகவும், இரு தரப்பினரும் சமாதானமாகச் சென்றுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாரின் இந்த செயலுக்கு மீண்டும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
பின்னர், புகாருக்கு உள்ளான பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பாலியல் ரீதியாக அத்துமீறுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து, இரவோடு இரவாக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் வடக்குப் பகுதி, 129-வது வட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரவின் மற்றும் சி.ஏகாம்பரம் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி. பேட்டி: இதற்கிடையில், சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: விருகம்பாக்கம் சம்பவம் தொடர்பாக முதல்வர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
நடந்த சம்பவம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியது. இதனால்தான் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மற்றவர்களைக் குறை சொல்லும் அண்ணாமலை குறித்து, அவரது கட்சியில் இருந்த பெண்ணே குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை சொல்ல வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT