Published : 04 Jan 2023 05:09 PM
Last Updated : 04 Jan 2023 05:09 PM

“2026-ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் நோக்கம்” - அன்புமணி

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்

மதுரை: "எந்த அரசாக இருந்தாலும் நல்லது செய்தால் நாங்கள் பாராட்டுவோம். கெட்டது செய்தால் கடுமையாக எதிர்ப்போம், போராடுவோம். இதில் திமுக, அதிமுக என்று எங்களுக்கு வித்தியாசம் கிடையாது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மதுரையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவால்தான் பாமக வளர்ந்துள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்ட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஜெயக்குமாருக்கு எங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு நேற்று தெளிவாக பதிலளித்துள்ளார். அதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கு கிடையாது. இதுதொடர்பாக அவர்கள் கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏதாவது கருத்து தெரிவித்தால், அதற்கு நான் பதிலளிக்கிறேன்" என்றார்.

அப்போது அவரிடம், இதுபோன்ற சர்ச்சை நிலவுகின்ற சூழலில் தொடர்ந்து பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இதுதொடர்பாக பலமுறை நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன். ஆனால், மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள். பலமுறை தெளிவுபடுத்திவிட்டேன்.

எங்களுடைய நோக்கம், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்பது எங்களது நோக்கம். அதற்கேற்ற வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமைப்போம். அதுதொடர்பான முடிவை தேர்தலுக்கு ஒரு 6 மாதங்களுக்கு முன்பாக எடுப்போம். எனவே அதற்கு இப்போது அவசரம் எதுவும் கிடையாது" என்றார்.

திமுகவுடன் கூட்டணிக்குச் செல்வதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "எந்த அரசாக இருந்தாலும் நல்லது செய்தால் நாங்கள் பாராட்டுவோம். கெட்டது செய்தால் கடுமையாக எதிர்ப்போம், போராடுவோம். இதில் திமுக, அதிமுக என்று எங்களுக்கு வித்தியாசம் கிடையாது. அதிமுக ஆட்சிக் காலத்தில் எத்தனையோ திட்டங்களை பாராட்டியிருக்கிறோம், தீமையாக இருந்தால் எதிர்த்திருக்கிறோம். அதேபோலத்தான் திமுக ஆட்சியிலும் நல்லதை வரவேற்றுள்ளோம். தீயவைகளுக்கு எதிராக கடுமையாக போராடியிருக்கிறோம்.

எங்களது கோரிக்கைகளை ஏற்று திமுக ஆட்சியில் ஆன்லைன் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டில், 55 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சி போதும் என்று மக்கள் மனதில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற வியூகங்களை அமைத்துக்கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x