Last Updated : 30 Dec, 2022 04:41 PM

19  

Published : 30 Dec 2022 04:41 PM
Last Updated : 30 Dec 2022 04:41 PM

“தமிழக மக்களுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை” - பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேச்சு

பாமக மாநில சிறப்புப் பொதுக்குழு கூட்டம்

விழுப்புரம்: புதுச்சேரி அருகே தமிழக எல்லையான நாவற்குளம் பகுதியில் பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: "அண்மையில் பிரசாந்த் கிஷோர் நடத்திய ஆய்வில் அதிக இளைஞர்கள் உள்ள கட்சி பாமக என தெரியவந்துள்ளது. இந்த பிரசாந்த் கிஷோர் தான் மோடி, ஜெகன்மோகன் ரெட்டி, ஸ்டாலின் உள்ளிட்டோர் வெற்றிபெற உதவியர் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஒரு கட்சியின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவ முடிந்தது என்பதாகும்.

பாமக இல்லாவிட்டால் சமச்சீர் கல்வி கிடைத்திருக்காது. சமூக நீதி , 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. 108 அம்புலன்ஸ் கிடைத் திருக்காது, லாட்டரி ஒழிந்திருக்காது இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். இதுதான் ஒரு கட்சியின் உண்மையான வெற்றி. அந்த வெற்றியை நோக்கி நாம் பயணிக்கிறோம். நம் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சியாகும். நம் இலக்கை நோக்கி வேகமாக செல்ல பதவி முக்கியமாகிறது.

16 வருடங்களாக தொடர்ந்து நிழல் நிதி அறிக்கை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை வெளியிட்டது. சில கட்சிகள் விளம்பர அரசியல் செய்துவருகிறார்கள். ஒரு கட்சி என்ன செய்கிறது என்பதை செய்தியை பார்த்துதான் தெரிய வருகிறது. ஒருவர் வாட்ச் காட்டுகிறார். ஒருவர் அடுக்கு மொழியில் பேசுகிறார். நமக்கு தெரிந்தது வளர்ச்சி அரசியல். நமக்கான அங்கிகாரம் வரும்.

தமிழக மக்களுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை. களம் நன்றாக உள்ளது. அதிமுக 4 ஆக உடைந்துள்ளது. திமுக மீது பலமான விமர்சனம் உள்ளது. மற்ற கட்சிகளின் சத்தம் மட்டுமே ஒலிக்கிறது. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் தொடங்கி 10 ஆண்டுகளுக்குள் முடிந்தேபோனது. கட்சியின் கொள்கை எத்தனை மக்களை சென்றடைகிறது என்பது முக்கியம். எண்ணிக்கை அல்ல. கடந்த தேர்தலில் முக்கிய முடிவு எடுத்தது நமக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதை நோக்கிதான்.

தமிழகத்தின் 2 பெரிய சமூகத்தில் 40 சதவீத மக்கள் உள்ளனர். ஒரு சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று முன்னேறி வருகிறார்கள். 20 விழுக்காடு கேட்டபோது 10. 5 விழுக்காடு கிள்ளி கொடுத்தார்கள். பின் ரத்து செய்தார்கள். உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய சொன்ன காரணங்களில் 6-ஐ ஏற்றுக்கொண்டுள்ளது.

இட ஒதுக்கீடு அளிக்க சொல்ல ராமதாஸ், தமிழக முதல்வரிடம் பேசியுள்ளார். மேலும் நானும், கோ.க.மணியும் பேசியுள்ளோம். இன்னும் 6 மாதத்தில் 10. 5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வரும். அதற்கான முயற்சி நடந்து வருகிறது.

என்எல்சி விரைவில் தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளது. அதற்காதத்தான் நிலம் எடுக்கும் முயற்சி வேகமாக நடைபெற்று வருகிறது. அதற்கு பாமக இடம் கொடுக்காது. ஒரு பிடி மண் எடுக்க விடமாட்டோம்” என்று அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மத்தியிலும், மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
  • தமிழக மக்களின் வாழ்வை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஆளநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக 25,000 ஏக்கர் விளை நிலங்களை பறிப்பதை தமிழக அரசும், என்.எல்.சி. நிறுவனமும் உடனடியாக கைவிட வேண்டும்.
  • தமிழகத்தில் தனியார் வேலை வாய்ப்புகளில் 80 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்.
  • அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • சோழர் பாசனத் திட்டம், தருமபுரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
  • மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
  • வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
  • கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து போதையில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
  • தமிழக அரசு பள்ளிகளில் ஓர் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; ஒரு லட்சம் ஆசிரியர்களை புதிதாக நியமிக்க வேண்டும்.
  • நீட் தேர்விலிருந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
  • இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்யப் படுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
  • சென்னையில் எஞ்சியுள்ள மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் ஒரு மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும்.
  • புதுச்சேரியில் பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
  • புதுவையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

இக்கூட்டத்தில் கௌரவத் தலைவர் மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x