Published : 30 Dec 2022 04:34 AM
Last Updated : 30 Dec 2022 04:34 AM
சென்னை: அரசியலமைப்பு, மதச்சார்பின்மை, மாநில உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகக் கூறி, அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை பேரணி நேற்று நடந்தது.
இதன்படி சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் தொடங்கிய பேரணி கலைஞர் வளைவு அருகே வந்தபோது போலீஸார் அவர்களை தடுத்தனர். இதனால் போலீஸாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக பேரணிக்கு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தலைமை தாங்கினார். மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார்.
கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், எம்எல்ஏக்கள் மாரிமுத்து, டி.ராமச்சந்திரன், எம்.பி.க்கள் எம்.செல்வராஜ், கே.சுப்பராயன், கட்சியின் மாநில பொருளாளர் கோவை எம்.ஆறுமுகம், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாசலம், மாநில துணைச் செயலாளர்கள் வீரபாண்டியன், நா.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இப்பேரணி குறித்து டி.ராஜா கூறியதாவது: ஆளுநருக்கென பிரத்யேகமாக அதிகாரம் கிடையாது என சக்காரியா கமிஷன் தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் காப்பற்றப்பட வேண்டுமானால் ஆளுநர் பதவியே நீக்கப்பட வேண்டும். ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறும்போது, "ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா விவகாரத்தில் சட்டத் துறை அமைச்சர், முதல்வர், அரசியல் கட்சிகள் என யாரையும் மதிக்காமல் சூதாட்டம் நடத்துவோரை அழைத்து பேசுகிறார். மேலும் இந்தியா கெட்டுப்போனதற்கு காரணம் கார்ல் மார்க்ஸ் என்கிறார். சனாதனம் நாட்டை ஒற்றுமைப்படுத்துவதாகவும் கூறுகிறார். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஆளுநர் வெளியேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.
நல்லகண்ணு கூறும்போது, "தமிழக மக்களின் அரசியலை, ஜனநாயகத்தை, சமத்துவத்தை பாதுகாக்கவே இந்த போராட்டம். ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT