Last Updated : 30 Dec, 2022 04:33 AM

 

Published : 30 Dec 2022 04:33 AM
Last Updated : 30 Dec 2022 04:33 AM

மதுரையில் சார் பதிவாளர் அலுவலகங்கள் இடமாற்றம்: ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகம் வெறிச்சோடியது

மதுரை: மதுரையில் கடந்த 10 ஆண்டுகளாக பரபரப்பாக இயங்கி வந்த ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகம், சார் பதிவாளர் அலுவலகங்கள் இடமாற்றத்தால் வெறிச் சோடியது. அங்கு மக்கள் பயன்பாடு அதிக முள்ள பிற அரசு அலுவலகங்களை திறக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை ஒத்தக்கடை ராஜகம்பீரத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகம் கட்ட திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு பதிவுத்துறை வளாகத்தை 22.11.2012-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இங்கு தெப்பக்குளம், ஒத்தக்கடை, சொக்கிகுளம், தல்லாகுளம், மதுரை வடக்கு இணை சார் பதிவகம் 1 ஆகிய 5 சார் பதிவாளர் அலுவலகங்கள், துணை பதிவுத்துறை தலைவர், மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டன.

இந்நிலையில் சார் பதிவாளர் அலு வலகங்கள் அதன் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த ஒத்தக்கடை (புதிய பெயர் காதக்கிணறு), தெப்பக்குளம் (புதிய பெயர் கருப்பாயூரணி), சொக்கிகுளம் (புதிய பெயர் விளாங்குடி) சார் பதிவாளர் அலுவலகங்கள் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட வாடகை கட்டிடங்களுக்கு மாற்றப் பட்டு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

புதிய காதக்கிணறு சார் பதிவாளர் அலுவலகம் காதக்கிணறு ஜாங்கிட் நகருக்கும், விளாங்குடி சார் பதிவாளர் அலுவலகம் கூடல்புதூர் டிஎன்எச்பி காலனிக்கும், கருப்பாயூரணி சார் பதிவாளர் அலுவலகம் கருப்பாயூரணி சீமான் நகரிலும் செயல்படத் தொடங்கியுள்ளன. ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் தல்லாகுளம் மற்றும் மதுரை வடக்கு இணை சார் பதிவகம் 1 மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது.

மதுரையில் பல்வேறு இடங்களில் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வந்த சார் பதிவாளர் அலுவலகங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுத்துறையின் சொந்த கட்டிடமான ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகத்துக்கு மாற்றப்பட்டது. இதனால் மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பத்திரப்பதிவுக்காக பொதுமக்கள் ஒத்தக்கடை, ராஜகம்பீரம் பகுதிக்கு வந்து சென்றனர். இதனால் பதிவுத்துறை வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. ஒத்தக்கடை, ராஜகம்பீரம், திருமோகூர் பகுதிகளில் வணிக வளாகங்கள், வங்கிகள், குடியிருப்புகள் பெருகின.

இந்நிலையில் மதுரையின் பெரும்பகுதியை உள்ளடக்கிய 3 சார் பதிவாளர் அலுவலகங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளாக பரபரப்புடன் இயங்கி வந்த ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகம் வெறிச்சோடி உள்ளது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறிய தாவது: வாடகை கட்டிடங்களில் செயல்படும் அரசு அலுவலகங்கள் நாளடைவில் சொந்த கட்டிடத்துக்கு மாற்றப் படுவது வழக்கம். பொதுமக்களுக்கு பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாகம் அமைக்கப்பட்டது. தற்போது சொந்த கட்டிடத்தில் இருந்த சார் பதிவாளர் அலு வலகங்களை வாடகை கட்டிடங்களுக்கு மாற்றியது வியப்பாக உள்ளது.

இருப்பினும் சார் பதிவாளர் அலு வலகங்கள் அந்தந்த எல்லையில் இருக்க வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் மாற்றியதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியின் வளர்ச்சியை தக்க வைக்கும் பொருட்டு, ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாகத்துக்கு மக்கள் பயன்பாடு அதிகமுள்ள வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x