Published : 28 Dec 2022 04:23 AM
Last Updated : 28 Dec 2022 04:23 AM
சிவகங்கை: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.
அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி அனைத்து மாநிலங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தொழில், கல்வி, பொருளாதாரத்தில் நம் நாடு சிறந்து விளங்குகிறது. அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, மாவட்ட எஸ்பி செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சிவராமன், தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்ட இயக்குநர்கள் பாண்டியன் (காரைக்குடி), நாகராஜன் (மதுரை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வி.கே.சிங் கூறியதாவது: தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுங்கச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனங்கள் தொடர்ந்து 6 மாதங்களுக்கு கண்காணிக்கப்படும். இதில் அடிக்கடி செல்லக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் குறைக்கப்படும். தமிழகத்தில் பாஜக வலிமையாக வளர்ந்து வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT