Published : 28 Dec 2022 04:27 AM
Last Updated : 28 Dec 2022 04:27 AM

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது: விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் முல்லை பெரியாற்றில் மலர்தூவி வழிபட்டனர்.

கூடலூர்: முல்லை பெரியாறு அணையில் 142 அடி அளவு நீரைத் தேக்கவும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடி அளவு நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று 2014-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து 2014, 2015, 2018-ல் 142 அடி அளவு நீர் தேக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் போதிய மழையின்றி நீர்மட்டத்தை உயர்த்த முடியவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு நவ.30-ல் நீர்வரத்து இருந்ததால் 142 அடி அளவு நீர் தேக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகவே தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இதனைத் தொடர்ந்து டிச.3-ம் தேதி 136 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், டிச.14-ம் தேதி 141 அடி உயர்ந்ததால் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மழை குறைந்ததால் 142 அடிக்கு நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நேற்று காலை 10 மணிக்கு நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து கேரள பகுதிக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தின் சப்பாத்து, வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு உள்ளிட்ட கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,750 கனஅடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு 1,867 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கூடுதல் நீர் திறப்பால் லோயர் கேம்ப் மின் நிலையம் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியது. 4 ஜெனரேட்டர்களிலும் தலா 42 மெகாவாட் வீதம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு 5-வது முறையாக அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி வீரபாண்டி அருகே உள்ள பாலார்பட்டியில் உள்ள முல்லை பெரியாற்றில் விவசாயிகள் மலர்தூவி வழிபட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x