Published : 28 Dec 2022 04:40 AM
Last Updated : 28 Dec 2022 04:40 AM
மதுரை: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் போனஸ் அறிவிப்பும், அகவிலைப்படி உயர்வில் மவுனம் சாதிப்பதும் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் அறிவிக்கக் கோரியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2022 முதல் உயர்த்தி வழங்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக 1.7.2022 முதல் வழங்கக் கோரியும் நாளை (டிச.29) அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தோம்.
இந்தச் சூழலில் தமிழக அரசு அவசர அவசரமாக பொங்கல் போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்குப் பதில் முன்கூட்டியே அறிவித்து அரசு ஊழியர் நலனில் மிகவும் அக்கரை கொண்டுள்ளதைப் போன்ற போலியான தோற்றத்தை தமிழக அரசு உருவாக்க முயன்றுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸாக வழங்கப்பட்டு வருகிறது.போனஸ் என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுபடா ஊதியம் எனவும், போனஸ் அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதை வசதியாக மறந்தும், மறைத்தும், கருணைத் தொகை என்றும், மிகை ஊதியம் என்றும் போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுகிறது.
ரூ 7 ஆயிரத்துக்குப் பதிலாக 3 ஆயிரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சி மற்றும் டி பிரிவில் காலியிடங்கள் அதிகம் இருக்கும் நிலையில், ரூ.221.42 கோடி செலவு என்பது மிகைப்படுத்தப்பட்ட தொகை.
4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது. பெரும்பான்மையான ஊழியர்களை வஞ்சிக்கும் வண்ணம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து நாளை நடக்க உள்ள போராட்டத்தில் ஊழியர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT