Published : 28 Dec 2022 04:27 AM
Last Updated : 28 Dec 2022 04:27 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் டீ கடைக்காரர், பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில், சமூக விரோதிகளால் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. தகவலறிந்து கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், வன்கொடுமைத் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வெள்ளனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கிராமத்தில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்தநிலையில், வேங்கைவயல் கிராமத்துக்கு நேற்று ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோரிடம், இறையூர் கிராமத்தில் உள்ள டீ கடையில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாகவும், அங்குள்ள அய்யனார் கோயிலுக்குள் தங்களை அனுமதிப்பதில்லை என்றும் வேங்கைவயல் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆட்சியர் கவிதா ராமு, வேங்கைவயல் கிராமத்தினரை அய்யனார் கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபடச் செய்தார். மேலும், வேங்கைவயல் கிராமத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தினார். அப்போது, இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கம்மாள்(35) என்பவர் திடீரென சாமியாடிக் கொண்டு, வேங்கைவயல் கிராமத்தினரை அய்யனார் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில், இரட்டைக் குவளை முறையை கடைப்பிடித்ததாக டீ கடைக்காரர் மூக்கையா(57), அவரது மனைவி மீனாட்சி(52), கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்ததாக சிங்கம்மாள், அஞ்சப்பன் ஆகியோர் மீது வெள்ளனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மூக்கையா, மீனாட்சி ஆகியோரை கைது செய்தனர்.
ஆட்சியர் எச்சரிக்கை: இதனிடையே, ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோயில்களில் சாதி ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடி திருத்தும் நிலையங்களில் சாதி வேறுபாடு காணப்பட்டாலோ, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால், மாவட்ட நிர்வாகத்துக்கு 94433 14417 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். கோயில்களில் சாதி ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, இரட்டைக் குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT