Published : 27 Dec 2022 06:13 PM
Last Updated : 27 Dec 2022 06:13 PM

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடந்த நடைபயண கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மும்பை விமான நிலையத்தை வாங்க அதானி குழுமத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி கடனை, மத்திய அரசு வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.200 கோடியை ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசினார்.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டாம்பட்டி, கள்ளிக்குடி, எழுமலை, குருவித்துறை ஆகிய 4 இடங்களிலிருந்து 400 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. நிறைவு நாளான இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன் முன்னிலை வகித்தார்.

இதில், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லக்கண்ணு, பா.ரவி உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேசியது: ''மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி மத்திய அரசின் ஒப்பந்த குளறுபடியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் நிதி ஒதுக்கீடு செய்தும், மத்திய அரசு நிதி ஒதுக்காமல் காலதாமதம் செய்து வருகிறது.

மும்பை விமான நிலையத்தை வாங்க அதானி குழுமத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி கடனை, மத்திய அரசு வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.200 கோடியை ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது. பெருநிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்து மதுரையின் வளர்ச்சியை தடுக்கிறது. அதேபோல், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு செய்ய மறுக்கிறது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x