Published : 27 Dec 2022 04:15 PM
Last Updated : 27 Dec 2022 04:15 PM

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்வு | தமிழக அரசின் அரசாணை செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30-ம் தேதி சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்தியது. இந்த அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், "சொத்து வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சிதான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, அரசு தீர்மானிக்க முடியாது. மத்திய நிதிக்குழு அறிக்கையின் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்து வரியை கணக்கிட முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை" என வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், "சென்னையில் 1998-ம் ஆண்டுக்குப்பின் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. வரியை உயர்த்துவதற்கான அவசியம் குறித்தும் ஆவண ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.மொத்தவிலை குறியீடு, பணவீக்கம், சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. கடந்த 1977-ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட நடைமுறையை கடைபிடித்தே தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தது. மாநகராட்சிகள் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார்.

அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, "மக்கள் நலத் திட்டங்களுக்கு தேவையான நிதியையும், அரசின் செலவினங்களுக்காகவும் வருவாயை திரட்டுவதும், வரி விதிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் சமன்படுத்துவதும் ஒரு மக்கள் நல அரசுக்கு அவசியமாகிறது. எனவே, வரி விதிப்பை வெளிப்படைத் தன்மையுடன், கேள்விகளுக்கு அப்பாற்பட்டு மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை. சொத்து வரியை உயர்த்துவது குறித்த அரசாணை என்பது ஆலோசனையாக உள்ளதே தவிர, உத்தரவாக இல்லை.இந்த அரசாணையின் அடிப்படையில், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. எனவே, சொத்து வரி உயர்த்துவது தொடர்பான அரசாணையும், மாநகராட்சி தீர்மானங்களும் செல்லும்" என்று தீர்ப்பளித்தார்.

அதேசமயம், சென்னையை பொறுத்தவரை சொத்து வரி செலுத்தும் 15 லட்சம் பேரில், 30 பேர் தெரிவித்த ஆட்சேபங்களை முறையாக பரிசீலித்து பதிலளித்திருந்தால் இந்த வழக்குகள் நீதிமன்றம் வந்திருக்காது. ஆட்சேபங்கள் கோரி முறையாக அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் அதிருப்தியை தெரிவித்துள்ளார். சொத்து வரியை நிர்ணயிக்க பின்பற்றப்படும் நடைமுறையை குறை கூற முடியாது. 2022-23ம் ஆண்டுக்கான இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தக்கூறி மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்து, 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டு முதல், அதாவது வரும் ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த உத்தரவிட்டார்.

சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும்" எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x