Published : 26 Dec 2022 06:14 AM
Last Updated : 26 Dec 2022 06:14 AM

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாகன சோதனையில் 281 பேர் மீது வழக்கு பதிவு: பைக் ரேஸில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது

சென்னை: சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர். குறிப்பாக, 350 தேவாலயங்களை சுற்றி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், நேற்று முன்தினம் இரவு போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 4 வழக்குகள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 6 வழக்குகள், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தது தொடர்பாக 68 வழக்குகள், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதாக 28 வழக்குகள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகள், 18 வயது நிரம்பாதவர்களுக்கு வாகனம் ஓட்ட கொடுத்தது தொடர்பாக 2 வழக்குகள் என மொத்தம் 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பைக் கொடுத்த தந்தை கைது: தியாகராயநகரில் உள்ள பிரபல தனியார் உணவகம் அருகே இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

முதல்கட்டமாக, சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த 70க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும், 18 வயது நிரம்பாத மகனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த தந்தையையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x