Published : 07 Apr 2014 11:49 AM
Last Updated : 07 Apr 2014 11:49 AM

உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க வெள்ளி விழா கொண்டாட்டம்

சென்னை மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் 25-வது ஆண்டு கொண்டாட்டம் அடையாறு எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, சங்கத்தின் மாநில தலைவர் டி.ஏ.பி.வரதகுட்டி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கே.கோபிநாத் முன்னிலை வகித்தார். தமிழக ஆளுநர் கே.ரோசய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட, ஜெயா கல்விக் குழு மங்களின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஏ.கனகராஜ் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளில் 5 சிறப்பு சாதனையாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை செய்து வரும் 5 சிறந்த சமூக சேவகர்களுக்கு ஆளுநர் ரோசய்யா விருதுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள 3 சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள், காது கேட்கும் கருவிகள் மற்றும் கருப்பு கண்ணாடிகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா பேசியதாவது: 2011 மக்கள்தொகை கணக்குப்படி 2கோடியே 68 லட்சம் இந்தியர்கள் மாற்றுத்திறனாளிகள். தமிழ்நாட்டில் 16 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள். ஆண்களை விட பெண்களில் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இன்றைய காலகட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, மறுவாழ்வு, வேலைவாய்ப்பு, அவர்களுக்கு தடை இல்லாத சூழலை உருவாக்குவதற்கானதாகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அலெக் சாண்டர் கிரகாம்பெல், அமெரிக்க ஜனாதிபதிகள் ஜார்ஜ் வாஷிங்டன், ரூஸ்வெல்ட், கவிஞர் மில்டன் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளே.

சக்கரநாற்காலியில் இருந்து கொண்டே பல சாதனைகளை செய்கிற இன்றைய பெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சாதனைகள் செய்வதற்கு ஊனம் ஒரு தடை அல்ல என நிரூபித் துள்ளார். அனைத்து மாற்றுத் திறனாளிகளும் அது போல தங்களை சாதனையாளர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு ரோசய்யா கூறினார்.

நிறைவாக சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் க.அப்புனு நன்றியுரை ஆற்றினார்.

இந்த விழாவில் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் எம்.பி.நிர்மல், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x