Published : 21 Dec 2022 03:36 PM
Last Updated : 21 Dec 2022 03:36 PM

சர்க்கரை ஆலை விவகாரம் | தஞ்சையில் விவசாயிகள் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு: எம்எல்ஏ உள்பட 150 பேர் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. அப்போது விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருமண்டங்குடி தனியார் ஆலை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும், வங்கிக் கடனிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும், புதிய நிர்வாகம் என்ற பெயரில் குழப்பம் ஏற்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது, அங்கு நடைபெறும் போராட்டம் குறித்து தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு முற்றுகை போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

அப்போது, விவசாயிகள் ஆத்திரத்தில் பேரிகார்டுகள் மீது ஏறியும், அதனை அகற்றிவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சி செய்ததால், போலீஸாருக்கும், விவசாயிகளுக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ எம்.சின்னதுரை உள்பட 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் கூறியது: "திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் ஆலையை மூடிவிட்டனர். விவசாயிகளின் பெயரில், வங்கிகளில் ரூ.300 கோடியை கடனாக பெற்று, விவசாயிகளை கடனாளியாக்கி விட்டனர். இதனால் சுமார் 15 ஆயிரம் கரும்பு விவசாயிகள் தெருவில் நிற்கின்றனர். கடந்த ஆட்சி காலங்களில் நடவடிக்கையும் எடுக்காததால், திமுக ஆட்சியிலாவது நீதி கிடைக்குமா என விவசாயிகள் போராடி வருகின்றனர்.

எனவே, 22 நாட்களாக போராடி வரும் விவசாயிகளின் பெயரில் உள்ள கடன் தொகையை தமிழக அரசு, புதிய ஆலை நிர்வாகத்தின் பெயரில் மாற்றி, விவசாயிகளை கடனிலிருந்து விடுவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும், தவறும் பட்சத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நிரந்தர தீர்வு காணும் வகையில், அந்த ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் ஆகியோர் தலைமை வகித்த இந்த முற்றுகை போராட்டத்தில் எம்.எல்.ஏ எம்.சின்னதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வேல்முருகன், மாநிலச் செயலாளர்கள் டி.காசிநாதன், எஸ்.நாராயணசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், எம். பழனிஅய்யா மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x