Published : 13 Dec 2016 08:30 AM
Last Updated : 13 Dec 2016 08:30 AM

சென்னை, காஞ்சி, திருவள்ளூரை சுற்றிவளைத்த சூறாவளி: கனமழை, மரங்கள் சாய்ந்தன, மின்சாரம் துண்டிப்பு

வரலாறு காணாத அதிதீவிர வார்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் நேற்று கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

“வார்தா” புயல் சென்னையைத் தாக்கியதால் பேருந்துகள், ஆட்டோக்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகளும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.

‘வார்தா’ புயல் சென்னையை நேற்று பகல் 11 மணியளவில் அசுர வேகத்தில் தாக்கியதால் முக்கிய சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. பேய்க்காற்றுடன் பலத்த மழையும் பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நத்தைபோல ஊர்ந்து சென்றன. அடைமழை பெய்ததால் மாநகரப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஒருசில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி ஆட்டோக்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதனால் பலரும் நடந்தே தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

சூறைக்காற்றில் கடைகளின் விளம்பர போர்டுகள் தூக்கி வீசப்பட்டன. மழை காரணமாக கடைக்கு வாடிக்கையாளர்களும் வரவில்லை. இதையடுத்து பெரும்பாலான கடைகள் நேற்று 11 மணியளவில் மூடப்பட்டன. பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு புயலின் கோரத் தாண்டவம் இருந்ததால், அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர். பிற்பகலில் காற்றின் வேகம் குறைந்ததால் ஒருசில தேநீர் கடைகள் திறக்கப்பட்டன. மாலை 4.30 மணியளவில் மீண்டும் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து திறந்திருந்த ஒருசில கடைகளும் மூடப்பட்டன. மொத்தத்தில், “வார்தா” புயலால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.

வார்தா புயலால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாமல்லபுரம் தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை, பிள்ளையார்பாளையம், ஒலிமுகமதுபேட்டை, ஜி.எஸ்.டி. சாலை உட்பட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நண்பகல் வரை 14.50 மிமீ மட்டுமே மழையளவு பதிவானது.

மாவட்டத்தில் 44 கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் விளம்பரப் பலகைகள் சரிந்ததால் பேருந்துகள் உள்ளே போக முடியாமலும், வெளியே வரமுடியாத சூழலும் ஏற்பட்டது.

நண்பகல் வரை குறைவாக இருந்த புயலின் தாக்கம் நண்பகல் 2 மணிக்கு மேல் அதிகரித்து. பயங்கரமான சூறைக்காற்றுடன் மழை பொழிந்ததால் கூரைகள் பறந்தன. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

போலீஸார் திணறல்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் பலர் திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவின் பாதுகாப்புக்கு சென்றுள்ளனர். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்தல் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

சுவர் இடிந்து சிறுமி பலி

செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், காட்டாங்குளத்தூர், வண்டலூர் , தாம்பரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் இணைப்பு, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. செங்கல்பட்டு மற்றும் பெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடிகள் சேதமடைந்ததால், கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது.

செங்கல்பட்டு சுற்று பகுதி கிராமங்களில் மழையினால் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். கேளம்பாக்கம் அடுத்த வீராபுரம் பகுதியில் பலத்த காற்று வீசியதில், திருப்போரூர் மற்றும் ஆலத்தூர் பகுதிக்கு மின்சாரம் வழங்கி வரும் 110 கிலோவாட் மின்சார கோபுரங்களில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, மின்சார வாரிய ஊழியர்கள் கொட்டும் மழையில் பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில் இதனால் நீர் இருப்பு அதிகரித்தது. பொன்னேரி, குமிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்தது.

பழவேற்காடு பகுதியில் வார்தா புயல் கரையை கடந்ததால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. தாழ்வான பகுதியில் குடியிருந்த மக்களை மீட்புப் படையினர் பாதுகாப்புடன் மீட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு தேவையான அடிப் படை வசதிகள் செய்து தரப்பட் டுள்ளன. மழையைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது.

இருளில் மூழ்கிய சென்னை நகரம்

வார்தா புயல் ஏற்படுத்திய சூறாவளி மற்றும் கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சூரிய வெளிச்சமும் இல்லாததால் பகலிலேயே சென்னை நகரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

வார்தா புயல் 12-ம் தேதி பிற்பகல் சென்னையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அரசு அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் காற்றின் வேகம் அதிகரித்தது. கூடவே சாரல் மழையும் பெய்தது. நள்ளிரவு முதல் கன மழை கொட்டியது. காற்றும் வேகமாக வீசியது. இதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. இதனால், இருள் சூழ்ந்தது. பலத்த காற்று காரணமாக மின் கம்பிகள் அறுந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன.

காற்றுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதியில் இருந்த பல மின் இணைப்பு பெட்டிகள் நீரில் மூழ்கின. மின் அதிகாரிகள் அதை உடனடியாக கண்டறிந்து மாநகராட்சி ஊழியர்கள் துணையுடன் தேங்கி நின்ற நீரை அப்புறப்படுத்தி சரி செய்தனர். பல இடங்களில் மின் மாற்றிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதனாலும் மின் விநியோகம் தடைபட்டது.

மேலும் மழை காரணமாக சூரிய வெளிச்சம் இல்லை. இதனால், சென்னையில் பெரும்பாலான பகுதிகள் பகலிலேயே இருளில் மூழ்கின. மின் துண்டிப்பால் உடல் நலமில்லாதவர்கள், முதியவர்கள், கர்பிணிகள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டே மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x