Published : 18 Dec 2022 04:44 AM
Last Updated : 18 Dec 2022 04:44 AM

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 6 ஆயிரம் வழக்குகள் தேக்கம் - 8 மாதங்களாக தீர்ப்புக்காக காத்திருக்கும் 200 வழக்குகள்

வழக்கறிஞர் எல்.சந்திரகுமார்

சென்னை: மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் 6 ஆயிரம் வழக்குகள் தேக்க மடைந்துள்ளன. மேலும், கடந்த 8 மாதங்களாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்ப்பளிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற அகில இந்திய பணிகள் மற்றும் அனைத்து பொதுசேவை சார்ந்த மத்திய அரசு பணிகளில் 219 துறைகளில் பணியாற்றும் பணியாளர்களின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள், பணி விதிகள், சேவை நிபந்தனைகள், பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட பிற புகார்கள் குறித்த வழக்குகளை பிரத்யேகமாக விரைந்து விசாரிப்பதற்காக, மத்திய நிர்வாக தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டன. இவை நாடு முழுவதும் டெல்லி, சென்னை, அகமதாபாத், லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, எர்ணாகுளம் உள்ளிட்ட 19 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த தீர்ப்பாயங்கள் கடந்த 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிறகு, உயர் நீதிமன்றங்களில் இருந்து 13,350 வழக்குகள் இங்குமாற்றப்பட்டன. தற்போது வரை நாடு முழுவதும் 8 லட்சத்து 82 ஆயிரத்து 85 வழக்குகள் தொடரப்பட்டு, அதில் 8 லட்சத்து 4 ஆயிரத்து 272 வழக்கு களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாய அமர்வில் இதுவரை 17 ஆயிரத்து 15 வழக்குகள் தொடரப்பட்டு, அதில், 10 ஆயிரத்து 913 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 98 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஒரு அமர்வு மட்டுமே நியமனம்: ஒவ்வொரு அமர்விலும் நீதித்துறை தரப்பில் ஒருவரும், நிர்வாக தரப்பில் ஒருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு வழக்குகளை விசாரிக்கின்றனர். சென்னையைப் பொருத்தமட்டில் 2 அமர்வுகளில் ஒரு அமர்வு பல மாதங்களாக காலியாக உள்ளது. மற்றொரு அமர்வில் நிர்வாக உறுப்பினராக டி.ஜேக்கப் என்பவரும், நீதித் துறை தரப்பில் லதா பஸ்வராஜ் பாட்னே என்பவரும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

மேலும் சென்னையில் பதிவாளர், பிரிவு அலுவலர், நிர்வாக அலுவலர், தனிச் செயலர், ஸ்டெனோ என அனுமதிக்கப்பட்ட 74 பணியிடங்களில் 33 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் சுமார் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் இறுதி விசாரணை முடிந்தும், கடந்த 8 மாதங்களாக தீர்ப்பளிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள சர்வீஸ் பார் அசோசியேஷன் தலைவரான வழக்கறிஞர் எல்.சந்திரகுமார் கூறியதாவது:

ஆண்டுதோறும் 1,600 மனுக்கள்: சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஆண்டுதோறும் 1,400 முதல் 1,600 மனுக்கள் தாக்கலாகின்றன. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயங்கள் தொடங்கப்பட்டதன் நோக்கமே, அரசுப் பணியாளர்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென்பதே. ஆனால் சென்னை அமர்வில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களால், நூற்றுக்கணக்கான வழக்குகளில் விசாரணை முடிந்தும் கடந்த ஏப்ரல் முதல் தீர்ப்பளிக்கப்படாமல் கிடப்பில் உள்ளன.

இதனால் இந்த தீர்ப்பாயங்களின் நோக்கமே கேள்விக்குறியாகி வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்துக்குரிய அதே அதிகார வரம்பு, ஆளுகை இந்த தீர்ப்பாயத்துக்கும் உள்ளது. தற்போது மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ளபெருநகர உரிமையியல் நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி இயங்கி வருகிறது.

இதனால் பல வழக்குகளின் கோப்புகளைத் தேடுவதற்கே ஊழியர்கள் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட நேரிடுவதால் வழக்கு விசாரணை தேவையின்றி தள்ளி வைக்கப்படுகிறது. அதேபோல், போதுமான ஸ்டெனோகிராபர்கள் இல்லாததால் தீர்ப்புகளும் தாமதமாகி வருகிறது. இதனால் வழக்குதொடர்ந்தவர்களும், வழக்கறிஞர் களும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

வழக்கறிஞர் எல்.சந்திரகுமார்

ஒப்பந்த பணியாளர்களையாவது...: எனவே, சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உள்ள நிரந்தர காலிப்பணியிடங்களை நிரப்பும்வரை ஒப்பந்த அடிப்படையிலாவது பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதேபோல், பதிவுத் துறை, கோப்புகளைக் கையாள மற்றும் விசாரணைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைவரான ஓய்வுபெற்ற மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சித் வசந்த்ராவ் மோருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x