Published : 13 Dec 2022 07:57 AM
Last Updated : 13 Dec 2022 07:57 AM

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் களைகட்டிய ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: ஒரு காளை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை

மதுரை: பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், மதுரையில் காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து காளை உரிமையாளர் முடக்காத்தான் மணி கூறியதாவது: பொங்கல் பண்டிகை வந்தாலே ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஜல்லிக்கட்டு காளைகளை குழந்தைபோல் வளர்க்கிறோம். அதைப்போய் கொடுமைப்படுத்துவோமா? அதனால் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு காளைகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. முன்பெல்லாம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரைதான் ஜல்லிக்கட்டு காளைகள் விற்கப்படும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் காளைகளின் சந்தை மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

களத்தில் நின்று விளையாடும் காளைகள் ரூ. 10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விற்கிறது. அதிக போட்டிகளில் வெற்றிவாகை சூடும் காளைகள் அதை விட லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலை பேசுகின்றனர். ஆனால் உரிமையாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை விற்க மாட்டார்கள்.

தேனி, கம்பம், மதுரை, வத்திராயிருப்பு மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நடக்கும் சந்தைகளில் தரமான ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கலாம். கன்று அளவிலேயே காளையை எடுத்து வளர்த்து பயிற்சி கொடுக்க வேண்டும். போட்டிகளில் நின்று விளையாடினால் நாம் சொல்வதுதான் விலை.

காளைகளுக்கு மண்ணை குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சி அளிக்கிறோம். போட்டி நெருங்குவதால் காளைகள் திடகாத்திரமாக இருக்க தவிடு, உளுந்து தவிர தினமும் காலையும், மாலையும் அரை கிலோ பருத்தி, முக்கால் கிலோ பச்சரிசி, அரைமூடி தேங்காய், அரை கிலோ கம்பு மாவு, அரை கிலோ கோதுமை, மக்காச்சோளம், கானப்பயறு, உளுத்தம் தூசி போன்றவற்றை வழங்குகிறோம்.

பனி நேரமாக இருப்பதால் சில காளைகள் தண்ணீர் குடிக்காது. அந்த மாடுகள் வாயில், கத்தாழையை உப்பு வைத்து போட்டு விடுவோம். அதன்பிறகு தண்ணீர் குடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x