Published : 09 Dec 2022 03:04 PM
Last Updated : 09 Dec 2022 03:04 PM

'பேருந்துகள் இயங்கும்; மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும்' - அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்

பேருந்துகள்| கோப்புப் படம்

சென்னை: சென்னை உட்பட 5 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் ஆனால் பொதுமக்கள் பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, மாண்டஸ் புயல் கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது.

மேலும், அந்தந்த மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தொடர்பில் இருந்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கண்காணித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். மாண்டஸ் புயலானது கரையை கடக்கும் தருணத்தில், பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x