Published : 09 Dec 2022 02:22 PM
Last Updated : 09 Dec 2022 02:22 PM

இதுவரை 2 லட்சம் புகார்களுக்கு தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் மூலம் தீர்வு: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் இதுவரை 2 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் தின செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்," “மனித உரிமைகள்” என்ற உள்ளார்ந்த அடிப்படை கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உலகில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்டையிலும், மதிப்பு மற்றும் உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், அனைவரும் மனசாட்சியுடனும் சகோதர மனப்பான்மையுடனும் செயல்படவேண்டும் என்ற நோக்கில் “சர்வதேச மனித உரிமைகள் நாள்” ஆண்டுதோறும் டிசம்பர்-10 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1948ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (United Nation General Assembly) பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்து, மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் பல நாடுகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. இதன்மூலம் மக்களின் விடுதலை, சுயமரியாதை மற்றும் மனித நேயத்தை முழுமையாக அனுபவிப்பதைத் தடுக்கும் தடைகள் அகற்றப்பட்டுள்ளன; பல நாடுகளில் இனவெறிச் சட்டங்கள் அகற்றப்பட்டுவிட்டன; பெண்களை இரண்டாம் தர நிலைக்கு தள்ளும் சட்ட மற்றும் சமூக நடைமுறைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன; சிறுபான்மையினர் தங்கள் மத நம்பிக்கையை எந்தவித அச்ச உணர்வுமின்றி கடைபிடிக்க வழி ஏற்பட்டுள்ளது.

1948ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதில் இந்தியாவின் பங்கு மகத்தானது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டமானது 28.09.1993 அன்று நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின், சட்டப்பிரிவு 3, 21-ன் கீழ் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒன்றியத்திலும், மாநில மனித உரிமைகள் ஆணையம் மாநிலத்திலும் நிறுவப்பட்டன.

மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட பல மாநிலங்களில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் 17.04.1997 முதல் செயல்பட்டுவருகிறது. செயல்படத்துவங்கிய முதல் ஆண்டிலேயே 2162 புகார்கள் இந்த ஆணையத்தால் பெறப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டுள்ளன. 1997ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் ஆகஸ்ட் 2022 வரை இவ்வாணையத்திற்கு வரப்பெற்ற 2,45,688 புகார்களில் 2,06,762 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

1993-ஆம் ஆண்டின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டம், மனித உரிமைகள் கல்வி, உளவியல் மற்றும் குற்றவியல் ஆகியவற்றை பாடமாகப் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ‘நிலையப் பயிற்சி‘ (Internship) வழங்கப்படுகிறது. மேலும் இக்கல்லூரி மாணவர்கள் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஆணையத்தின் செயல்பாட்டைப் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கும் ஊக்குவிக்கப்படுவது பாராட்டுக்குரியது." இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x