Published : 07 Dec 2022 06:18 AM
Last Updated : 07 Dec 2022 06:18 AM

66-வது நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் அஞ்சலி: ஆளுநர் மாளிகையில் புதிதாக வெண்கல சிலை திறப்பு

சென்னை: சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகை வளாகத்தில் அவரது சிலையை திறந்து வைத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சட்டமேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலர் வே.இறையன்பு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அடையாறு பகுதியில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் புகழாரம்: அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர், சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார், புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என சூளுரைத்து உறுதியெடுப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, பாமக சார்பில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், துணை தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார், செயலர் எஸ்.முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் எல்ஐசி வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை நோக்கி பேரணியாகச் சென்றனர். ‘தமிழகத்தில் ஜெய்பீம்.. ஜெய் காங்கிரஸ் மாடல்’ என்ற கோஷத்தை முன்வைத்து பேரணியாகச் சென்ற அவர்கள், பின்னர் அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,
மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக் குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் சந்திப்பில் அம்பேத்கர் சிலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா, மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஆழ்வார்பேட்டை தமாகா அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.திருவேங்கடம், மாநில இலக்கிய அணி தலைவர் கேஆர்டி ரமேஷ் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x