Published : 07 Dec 2022 06:28 AM
Last Updated : 07 Dec 2022 06:28 AM

படை வீரர்கள் நலனுக்கான கொடிநாள் நிதியை கணிசமாக வழங்குங்கள்: பொதுமக்களுக்கு ஆளுநர், முதல்வர் வேண்டுகோள்

சென்னை: படை வீரர்கள் நலனுக்கான கொடிநாள் நிதியை பொதுமக்கள் அதிக அளவில் வழங்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும், அவர்களின் கவுரவத்தை பாதுகாக்கவும் போராடிய வீரர்களின் நினைவாகவும் கடந்த 1949-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிச.7-ம் தேதி கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: முப்படை வீரர்கள், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னம். தேசத்தின் மீதான அவர்களின் தளராத விசுவாசமும், கடமையில் நேர்மையான பக்தியும் இந்தியாவை வலுவான தேசமாக மாற்றியுள்ளது. வெளி ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் குழப்பங்கள், இயற்கை சீற்றம் போன்றவற்றை எதிர்கொண்டு தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் அவர்கள் ஆற்றிய தியாகம் மக்களின் அபிமானத்தைப் பெற் றுள்ளது.

முப்படை வீரர்களின் இளமை மற்றும் சிறந்த பகுதியை தேச சேவையில் செலவிட்டதால், அவர்கள் முப்படையை விட்டு வெளியேறும்போது,​​அவர்களுக்கு நமது நன்றியை காட்ட வேண்டியது அவசியம்.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக பயன்படுத்தப்படும் கொடிநாள் நிதிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் பொன்னான வாய்ப்பை மக்களுக்கு வழங்குவதற்காக கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. கொடிநாள் நிதிக்கு தமிழக மக்கள் தாராளமாகப்பங்களிக்கும்படி கேட்டுக்கொள் கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களைத் தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, நம் சேமிப்பின் ஒரு பகுதியை ஒப்படைக்கும் உன்னதத் திருநாள், இந்தக் கொடிநாள்.

முன்னோடி மாநிலம் தமிழகம்: பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்து. நாட்டின் அத்தனை பகுதிகளையும் பத்திரப்படுத்தும் உத்தமச் செயலை சமரசம் செய்து கொள்ளாமல், பகைவர்களை விரட்டும்ஒப்பற்ற செயலை மேற்கொள்ளும் படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நம் மகத்தான கடமை. கொடி நாளுக்கு கொடுக்கும் நம் கொடையே, அவர்கள் குடும்பத்தினருக்கு பல்வேறு வகைகளில் பயன்தரும்.

கொடிநாளில் பெரும் தொகையை வசூலித்துத் தருவதில்தமிழகம் எப்போதும் முன்னோடிமாநிலமாக விளங்குகிறது. இந்தஆண்டும் பெருமளவில் நிதிவழங்கி, அவர்தம் குடும்பத்தினருக்கு வணக்கத்தையும், நன்றியையும் காணிக்கையாக்கிட, உங்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x