Published : 06 Dec 2022 06:57 AM
Last Updated : 06 Dec 2022 06:57 AM

திருவாரூர் | முத்துப்பேட்டை தர்காவில் 721-வது சந்தனக் கூடு திருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்புவானோடையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சேக் தாவூது ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்.

திருவாரூர்: முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்காவில் 721-வதுசந்தனக் கூடு திருவிழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 721-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நவ.25-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித சந்தனக் கூடு விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது.

இதற்காக சந்தனங்கள் நிரப்பிய குடங்களை தர்காவுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு பாரம்பரிய சிறப்புகளுடன் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை 2.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் தலைமையில் டிரஸ்ட்டிகள் புனித சந்தனக் குடத்தை தலையில் சுமந்து வந்து, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூட்டில் வைத்தனர். அதன்பின், அதிர்வேட்டுகள் முழங்க சந்தனக் கூடு ஊர்வலம் தொடங்கியது.

இந்த ஊர்வலம், அடக்கஸ்தலம், ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்குச் சென்று மீண்டும் தர்காவை 3 முறை சுற்றிவந்தடைந்தது. அப்போது விழாவில் பங்கேற்றவர்கள் பூக்களை சந்தனக் கூடு மீது வீசி துவாசெய்தனர். அதன்பின், அதிகாலை5 மணிக்கு சந்தனக் கூட்டிலிருந்து சந்தனக் குடங்கள் தர்காவுக்கு எடுத்து வரப்பட்டு, ஷேக்தாவூது ஆண்டவர் நினைவிடத்தில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சிநடைபெற்றது.

பிற மதத்தினரும் பங்கேற்பு: இதில், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, முத்துப்பேட்டையில் நேற்று பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x