Published : 06 Dec 2022 04:17 AM
Last Updated : 06 Dec 2022 04:17 AM
திருநெல்வேலி: தமிழக தகவல் அறியும் உரிமை சட்ட இணையதள விரிவாக்கத்தில் மெத்தனம் நிலவுவதாகவும், இது குறித்து மாநில வளர்ச்சி கொள்கைகுழுவிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவல்களை கோருவதற்கு, பிரத்யேகமான இணையதளத்தை மத்திய அரசு கொண்டுவந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில், இணையதளம் வழியாக அனைத்து துறைகளுக்கும் தகவல்கோரும் முறை இன்னும் முழுவதுமாக செயல்பாட்டுக்கு வரவில்லை.
தமிழகத்தில் கடந்த 25.6.2021-ம் தேதி முதல், வெள்ளோட்டமாக பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு மட்டுமே, இணையதள முறையில்தகவல் கோருதல் மற்றும் மேல்முறையீட்டு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கடிதம் மூலமாக தகவல் கோரும் முறையில், ஒரு சில துறையில் மட்டுமே 30 நாட்களுக்குள் தகவல்கள் கிடைக்கிறது. இதர துறைகளில் மேல்முறையீடு மற்றும் தகவல் ஆணையம் வரை சென்றால் மட்டுமே தகவல்கள் கிடைப்பதாக தகவல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ள தமிழகத்தில் அனைத்து அரசுத் துறைகளுக்கும் வலைத்தளம் இன்னும் விரிவு செய்யப்படாமல் இருக்கிறது. அண்டை மாநிலமான ஆந்திராவில் இணையதள விண்ணப்ப முறை 2019-ம்ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டு விட்டது. இணையதள வசதி வரும்போது, ஒவ்வொரு துறையிலும் எத்தனை மனுக்கள் காத்திருப்பு நிலையில் உள்ளன, எந்த அதிகாரியிடம் உள்ளது? போன்றவற்றை துறை அதிகாரிகள் துல்லியமாக கண்காணித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் தகவல்களை பொதுமக்கள் பெறுவதைஉறுதி செய்ய முடியும்.
மேல்முறையீட்டுக்கு செல்கின்ற, கால விரயம் மற்றும் விண்ணப்பங்களை தயார் செய்வதற்கு தேவையான செலவும் கணிசமாக குறையும். இணைய தளம் செயல்பாட்டுக்கு வரும் போது மட்டுமே அரசுக்கும் மக்களுக்குமான, ஒளிவுமறைவற்ற 100 சதவீத திறந்தவெளி நிர்வாகம் சாத்தியப்படும். நடைமுறையில் உள்ள கடித முறையின் மூலம் தகவல்பெறும் முறை, சுமையாக இருப்பதாகவே பெரும்பாலான ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் மதக நேரியை சேர்ந்த தகவல் ஆர்வலர் வரதன் அனந்தப்பன் கூறியதாவது: நீதிமன்ற வில்லைக்கான கூடுதல் கமிஷன், விண்ணப்பம் அச்சிடுவதற்கான செலவு , பதிவஞ்சல் செலவு போன்ற செலவுகளால், ஒரு விண்ணப்பம் அனுப்ப ஏறத்தாழ ரூ. 70 செலவாகிறது. இணையம் வரும்போது இந்த செலவு மற்றும் கால விரயம் வெகுவாக குறையும். கிளை அலுவலகங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் தகவல்கள் கிடைக்காத காரணத்தால்தான் விரக்தியுடன் பொதுமக்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார்கள்.
இணையதளம் மூலம் விண்ணப்பம் அனுப்புவதற்கான கட்டணம் எஸ்பிஐ வங்கி மூலம் செலுத்தினால் ரூ.10 என்றும், இதர வங்கிகளுக்கு கட்டணம் ரூ.16 என்றும் வசூலிக்கப்படுகிறது. இதைத் தவிர்த்து அனைத்து வங்கிகளுக்கும் ரூ.10 ஆக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT