Published : 03 Dec 2022 04:39 PM
Last Updated : 03 Dec 2022 04:39 PM

ரூ.4,000 கோடி வங்கிக் கடன் மோசடி: போலி நிறுவன பங்குதாரருக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சென்னை: ரூ.4,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் போலி நிறுவன பங்குதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ, எஸ்பிஐ வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்பிஐ வங்கியிடமிருந்தும் பெற்ற 4000 கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பி செலுத்தவில்லை என புகாரளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள், தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, போலி நிறுவன பங்குதாரரான ஆனந்த் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆனந்த், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் இந்த வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கும் இந்த முறைகேட்டுக்கும் தொடர்பில்லை என வாதிட்டார். மேலும், மனுதாரர் பெரிய அளவில் படிக்கவில்லை என்பதால் நிறுவனத்தின் வரவு - செலவு குறித்து அவருக்கு எதுவும் தெரியாது எனவும் வாதிடப்பட்டது.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஆனந்துக்கு ஜாமின் வழங்க கூடாது என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், அதிகம் படிக்கவில்லை எனக்கூறும் மனுதாரர், பத்து போலி நிறுவனங்களுக்கு உரிமையாளராகவும், பங்குதாரராகவும் இருந்துள்ளதாகக் கூறி, ஆனந்துக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஆனந்துக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x