Published : 03 Dec 2022 03:12 PM
Last Updated : 03 Dec 2022 03:12 PM

யானைகள் வழித்தடத்தில் செங்கற்சூளைகள்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை மீது ஐகோர்ட் அதிருப்தி

கோப்புப் படம்

சென்னை: யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகள் குறித்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த விசாரணையின்போது முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 134 செங்கற்சூளைகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. இந்த செங்கற்சூளைகள் ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட யானைகள் வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதியின்றி செயல்படும் இந்த 143 செங்கற்சூளைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், செங்கற்சூளைகள் அரசு அனுமதி பெற்று செயல்படுகிறாதா என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

23 செங்கற்சூளைகளில் ஆய்வு நடத்தியதாக அறிக்கை தாக்கல் செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், மற்ற சூளைகள் பற்றிய எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை என்றும், அனுமதியின்றி சூளைகள் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், அவற்றை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அறிக்கையை தாக்கல் செய்த அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தகுந்த வழக்கு என்றனர்.

அப்போது குறுக்கிட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரப்பு வழக்கறிஞர், அடுத்த விசாரணையின் போது முழுமையான அறிக்கையை தாக்கல் செய்வதாக உறுதியளித்தார். அதை ஏற்று வழக்கை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x