Published : 03 Dec 2022 06:26 AM
Last Updated : 03 Dec 2022 06:26 AM

ராம்கோ சூப்பர்கிரீட் சிமெண்ட், இந்து தமிழ் திசை இணைந்து வழங்கிய சீர்மிகு பொறியாளர் விருது 2022

நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பொறியாளர்களின் சேவைகள் போற்றத்தக்கது என்று சென்னையில் நடைபெற்ற ‘சீர்மிகு பொறியாளர்-2022’ விருது விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு துறையில் சிறந்து விளங்கும் பொறியாளர்களைக் கவுரவிக்கும் விதமாக ராம்கோ சூப்பர்கிரீட் சிமெண்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘சீர்மிகு பொறியாளர் விருது-2022’ வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. அதன்படி கிராமப்புற வீட்டுக் கட்டுமானம், நகர்ப்புற குடியிருப்புக் கட்டுமானம், பொதுச் சேவை கட்டமைப்புகள், பொதுப் பயன்பாடு கட்டமைப்புகள், தொழிற்சாலைக் கட்டமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் விருது வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 230-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் விண்ணப்பித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தகுமார், விஐடி பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் சிவில் இன்ஜினீயரிங் பேராசிரியை மற்றும் டீன் டாக்டர் ஏ.எஸ்.சாந்தி, சிஎஸ்ஐஆர் மையத்தின் இயக்குநர் டாக்டர் என்.ஆனந்தவல்லி ஆகியோர் கொண்ட நடுவர் குழு மூலமாக இருகட்ட தேர்வுக்கு பின், திறன்மிக்க 35 பேர் சீர்மிகு பொறியாளர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் வியாழன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் தனது வரவேற்புரையில் பேசுகையில், ‘‘டிசம்பர் மாதங்களில் சங்கீத திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதிலும் மியூசிக் அகாடமியில் நடத்தப்படும் கச்சேரிகளுக்கு உல களவிலும் வரவேற்புள்ளது. அத்தகைய சிறப்புமிக்க இடத்தில் பாரம்பரியமிக்க இந்து நாளிதழ் குழுமம் மற்றும் ராம்கோ சிமெண்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த விழாவை நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. விருதுக்கு தகுதியான பொறியாளர்கள் நடுவர் குழு மூலம் நேர்மையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ‘சீர்மிகு பொறியாளர்-2022’ விருதுகளை 35 பேருக்கு வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது; இந்திய கட்டிடக் கலை வரலாற்றில் பல்லவர் காலம் தொடங்கி சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தமிழக கட்டிடக் கலை பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்றது. அதற்கு சான்றாக தமிழகம் எங்கும் கம்பீரமாக காட்சி தரும் கோபுரங்களும், கோயில்களும், நமது கட்டுமான கலையின் சிறப்பை இன்றைக்கும் பறைசாற்றி வருகிறது.

தமிழக கட்டிடக் கலையில் புதிய பரிணாமத்தை உருவாக்கியது பல்லவர்கள் தான். பாறைகளைக் குடைந்து, குடைவரை கோயில்களை உருவாக்கிய பல்லவ மன்னர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக மாமல்லபுரம் கடற்கரை கோயில் திகழ்கிறது. அதை யுனெஸ்கோ அமைப்பு புராதன சின்னமாக அறிவித்தது நமக்கான பெருமையாகும்.

அதன்பின் சோழர் ஆட்சிதான் தமிழர்களின் கட்டிடக் கலையின் பொற்காலமாக திகழ்ந்தது. டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு கரிகாலன் கட்டிய கல்லணையே காரணமாகும். ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில், கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்ற கலைநயமிக்க இடங்களை உலகம் முழுவதும் இருந்துவரும் சுற்றுலா பயணிகள் வியந்து பாராட்டுகின்றனர்.

நம்நாடு பல்லாயிரக்கணக்கான பொறியாளர்களால் கட்டமைக்கப்பட்டு இன்று வளர்ச்சியை அடைந்துள்ளது. அத்தகைய பொறியாளர்களைப் பாராட்டி விருது வழங்கும் இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் ராம்கோ நிறுவனத்துக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல், இதர துறைகளில் சேவையாற்றியவர்களுக்கும் இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பாக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருவதும் பாராட்டுக்குரியது.

மனிதனின் அடிப்படை தேவை இருப்பிடமாகும். அதுமட்டுமல்ல ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் கட்டுமானங்கள் முக்கியமானது. அந்த வகையில் நம் நாட்டில் தங்க நாற்கர சாலை, மெட்ரோ ரயில், தொழிற்சாலைகள் என பொறியியல் துறையானது நவீன வளர்ச்சியை பெற்றுள்ளது. இதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் நமது பொறியாளர்கள். அது தொழிலாக இருந்தாலும் அவர்கள் ஆற்றும் பணியை நாட்டின் முன்னேற்றத்துக்கு செய்யும் சேவையாகவே கருத வேண்டும். கட்டுமானத் துறையானது படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாகும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உட்பட பல்வேறு துறைகள் மற்றும் வாரியங்கள் மூலம் பொது மக்களுக்கு குடியிருப்புகளைத் தமிழக அரசு வழங்கி வருகிறது. நான் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 73 ஆயிரம் குடியிருப்புகள் கட்டி ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பொறியாளர்கள் தான். பொறியாளர்களின் சேவைகளை போற்றி பாராட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ.வி.தர்மகிருஷ்ணன் பேசும்போது, ‘‘பழங்காலம் முதலே தமிழர்கள் நாகரிக வளர்ச்சியில் முன்னேறிய நிலையில் இருந்துள்ளனர். அதற்கு தஞ்சை பெரிய கோயில் உட்பட பல்லவ, சோழ, பாண்டிய காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் சான்றுகளாகும். பல பேரிடர்களைக் கடந்தும் அவை இன்னும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. அன்றைய கட்டிடக் கலைஞர்களின் திறன் போற்றத்தக்கது. அதேபோல், தற்போதைய பொறியாளர்களும் சிறந்து விளங்குகின்றனர். அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (மார்க்கெட்டிங்) பாலாஜி கே.மூர்த்தி பேசுகையில், ‘‘எதிர்கால தேவை, சுற்றுச்சூழல் பாதிப்பற்ற, நீடித்த நிலையான வளர்ச்சியை நோக்கிய பயணிப்பது எங்கள் நிறுவனத்தின் நோக்கமாகும். வழக்கமான ஒபிசி சிமெண்ட் தயாரிப்பில் அதிகளவு கார்பன்டை ஆக்சைடு வாயு வெளியேறும். அதனால் பிளன்டடு சிமெண்ட் தயாரிப்பை முன்னெடுத்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த 200 ஆண்டுகளில் சிமெண்ட் தயாரிப்புக்கு தேவையான சுண்ணாம்புக் கல்லுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே, தற்போதைய பொறியாளர்கள் மாற்று வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டியது அவசியம்’’என்று தெரி வித்தார்.

‘இந்நிகழ்வில் அண்ணா பல்கலைக் கழகத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தகுமார், ரினாகான் ஏஏசி ப்ளாக்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.பி.செல்வசுந்தரம், சூர்யதேவ் அலாய்ஸ் அண்ட் பவர் பிரைவேட் லிமிடெட் பொதுமேலாளர் எஸ்.பாலச்சந்திரன், லெட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முத்துராமன், டாக்டர் எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலைக்கழக கட்டிடக்கலை துறைத் தலைவர் டாக்டர் ஸ்வேதா மதுசூதனன், ராம்கோ சிமெண்ட் பிராண்ட் மேனேஜ்மெண்ட் உதவி துணைத்தலைவர் ரமேஷ் பரத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ‘இந்து தமிழ் திசை’ வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் வி.சுப்ரமணியம், பொதுமேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வை ரினாகான் ஏஏசி ப்ளாக்ஸ், சூர்யதேவ் அலாய்ஸ் அண்ட் பவர் பிரைவேட் லிமிடெட், லெட்சுமி செராமிக்ஸ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x