Published : 03 Dec 2022 06:00 AM
Last Updated : 03 Dec 2022 06:00 AM

காஞ்சிபுரம் | அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் மருத்துவ ஊழியர் உட்பட 2 பெண்கள் உயிரிழப்பு: அமைச்சர்கள் ஆறுதல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன்.

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே பேருந்தின் பக்கவாட்டில் கல்குவாரி லாரி மோதியதில் பேருந்தில் பயணம் செய்த மருத்துவப் பணியாளர் உட்பட 2 பெண்கள் உயிரிழந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் மார்க்கமாகச் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை படூர் கிராமத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்து சிறுமயிலூர் அருகே வந்தபோது எதிரே வந்த கல்குவாரி லாரி பேருந்தின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது.

இதில் பேருந்தில் இருந்த படூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் புனிதா (51), நெற்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ரதி (21) ஆகிய இருவரும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 6-க்கும் மேற்பட்டோர் படூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்திய மருத்துவம், ஹோமியோபதி ஆணையர் சு.கணேஷ், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், எம்பி. செல்வம், எம்எல்ஏ பாலாஜி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x