Published : 02 Dec 2022 11:43 AM
Last Updated : 02 Dec 2022 11:43 AM

திருவண்ணாமலை தீப திருவிழா | பக்தர்களுக்கான காவல் உதவி மையங்களைத் திறந்துவைத்து டிஜிபி நேரில் ஆய்வு 

திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக காவல் உதவி மையங்களைத் திறந்து வைத்து,தீபத் திருவிழாவை முன்னிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா, கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்துநாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் வரும் டிசம்பர் 6-ம் தேதி ஏற்றப்படுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இதனையொட்டி திருவண்ணாமலை மாட வீதிகள், கிரிவலப்பாதையில் காவல்துறை சார்பில் 80 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உதவி மையங்களைத் திறந்துவைத்தும், காவல்துறை தரப்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் குழந்தைகள் தொலைந்து போவதைத் தடுக்கும் வகையில், குழந்தைகளுக்கு பார் கோடுகளுடன் கூடிய அடையாள அட்டை வழங்க காவல்துறை தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள், தாங்கள் அணிந்துவரும் விலையுயர்ந்த ஆபரணங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள ஆங்காங்கே ஒலிப்பெருக்கிகள் மூலம் எச்சரிக்கை செய்யவும் காவல்துறை தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதி: கார்த்திகை தீபத்தன்று மலையேற 2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். டிசம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மலையேறுபவர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காண்பித்தால் அனுமதிசீட்டு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது அங்கு அனுமதிச் சீட்டு பெற்று மலையேற வேண்டும்.

மலையேறுபவர்கள் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்றும் திரும்பி வரும்போது தண்ணீர் பாட்டிலை கொண்டு வர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மலையேறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x