Published : 28 Nov 2022 06:50 AM
Last Updated : 28 Nov 2022 06:50 AM

ராகுல் காந்தியின் நடைபயணம் பாஜகவுக்கு பின்னடைவை உண்டாக்கும்: அன்புமணி ராமதாஸ் கருத்து

நாகை கோட்டைவாசல்படியில் நேற்று நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

நாகப்பட்டினம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் இந்திய அளவில் பாஜகவுக்கு பின்னடைவை உண்டாக்கும் என பாமகதலைவர் அன்புமணி தெரிவித்தார்.

பாமக சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, நாகை கோட்டைவாசல்படியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: குறுவை அறுவடைக்கு பிறகு நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக திறக்கப்படாததால், விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்து நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, அதிகளவில் அரசின் கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். குறிப்பாக, கொள்முதல் செய்யும்போது விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

ரயில்வே திட்டங்களில் டெல்டா மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்துக்கு பாமக முழு ஆதரவு அளிக்கும். ராகுல் காந்தியின் நடைபயணம், அகில இந்திய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பாஜகவுக்கு பின்னடைவை உண்டாக்கும். இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

பாமகவினர் சாலை மறியல்: கூட்டம் முடிந்து அன்புமணி புறப்பட்டுச் சென்ற பிறகு, மண்டபம் முன்பு நின்று கொண்டிருந்த பாமக நாகை மாவட்டச் செயலாளர் சித்ரவேல் உள்ளிட்டோர் மீது ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து,அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நாகை -நாகூர் சாலையில் பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர். நாகை நகர போலீஸார் வந்து பாமகவினரை சமாதானப்படுத்தி, கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x