Published : 09 Dec 2016 08:54 AM
Last Updated : 09 Dec 2016 08:54 AM

குழந்தை உரிமை ஆணைய தலைவராக கல்யாணி மதிவாணனுக்கு பதிலாக புதிய தலைவர்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவ ராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்த ரான கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து, புதிய தலைவரை நியமிக்க தமிழக அரசுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ தமிழகத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முறைப்படுத்தப்படாமல் புதைகுழியில் தள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் எந்தஉரிமைகளும் நிலைநாட்டப்படவில்லை. புற்றீசல் போல பெருகி உள்ள குழந்தைகள் காப்பகங்கள் குழந்தைகளை வைத்து கோடி, கோடியாக பணம் சம்பாதித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆணையத்தின் தலைவராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான கல்யாணி மதிவாணனை அவசரம், அவசரமாக நியமித்துள்ள னர். எந்தவொரு வழிகாட்டு விதிமுறைகளையும் இதில் பின்பற்ற வில்லை. அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான அனுபவமுள்ள தகுதியான, திறமையான நபரை இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ‘‘கல்யாணி மதிவாணன் நியமனத்தை மறுபரிசீலனை செய்யாவிட்டால் நீதிமன்றம் தலையிட நேரிடும்’’ என தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தலைமை வழக் கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, ‘‘இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த 2 வாரம் அவகாசம் தேவை’’ என கோரினார். அதையேற்ற நீதிபதிகள், ‘‘தற்போ துள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டு புதிய தலைவரை நியமிக்க 2 வாரம் அவகாசம் அளிக்கிறோம்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 2-க்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x