Published : 18 Dec 2016 10:55 AM
Last Updated : 18 Dec 2016 10:55 AM

வார்தா புயலால் பாதிக்கப்படாத அடையார் ஆலமரம்

வார்தா புயலால் அடையார் பிரம்மஞான சபை வளாகத்தில் அமைந்துள்ள 450 ஆண்டுகள் பழமையான அடையார் ஆலமரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பிரம்மஞான சபை 1875-ம் ஆண்டு நியூயார்க்கில் தொடங்கப்பட்டது. அதன் இந்திய கிளை அடையாறு ஆற்றங்கரை மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை அருகில் 1882 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் 28 ஏக்கரில் தொடங்கப்பட்ட சபை, தற்போது 250 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ளது. இதில் 150 இனங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 450 ஆண்டுகள் பழமையான அடையார் ஆலமரமும் ஒன்று. பிரதான மரம் அழிந்து விட்டாலும், அதன் நூற்றுக்கணக்கான விழுதுகள் வேரூன்றி, சுமார் 4 ஆயிரத்து 670 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த மரத்தை தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பார்த்துச் செல்கின்றனர்.

வார்தா புயல், சென்னையின் பல்வேறு பகுதிகளை சின்னாபின்னமாக்கிய நிலையில், பிரம்மஞான சபை வளாகத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்தப் புயலில் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. இருப்பினும் அடையார் ஆலமரத்துக்கு மட்டும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுபற்றி பிரம்மஞான சபையின் பொதுமேலாளர் எஸ்.அரிகரராகவன் கூறியதாவது:

இந்த வளாகத்தில் ஐஐடிக்கு இணையாக மரங்கள் உள்ளன. பெரும்பாலான மரங்கள் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை. இந்த வளாகத்தில் நுழைந்தாலே, அடர்ந்த மரங்களால் இருள் சூழ்ந்திருக்கும். அதனால் இங்கு இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும். வார்தா புயலால் பெரிய பெரிய மரங்களெல்லாம் வேரோடு சாய்ந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வளாகத்துக்கு வந்து செல்கிறேன். இந்த வளாகத்தின் நிழலும், அமைதியும் என்னை மிகவும் கவர்ந்தது. புயலால் சுமார் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ள நிலையில்,இப்போது இந்த வளாகத்துக்கு வரவே பிடிக்கவில்லை.

இங்கு விழுந்த மரங்களில் பெரும்பாலானவை குல்மொகர் போன்ற வெளி நாட்டு மரங்கள்தான். உள்நாட்டு மரங்களான வேம்பு, புங்கன், இலுப்பை போன்றவை விழவில்லை. அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியில் அமைந்துள்ள அடையார் ஆலமரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அது சற்று ஆறுதல் அளிக்கிறது. இந்த வளாகத்தில் பழைய பசுமை திரும்ப சுமார் 10 ஆண்டுகள் ஆகும். மரங்கள் விழுந்த பகுதியில், உள்நாட்டு மரங்களை மட்டுமே வைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x