Published : 19 Nov 2022 04:39 AM
Last Updated : 19 Nov 2022 04:39 AM

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் - மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது புதிய பிரிவில் வழக்கு

பிரியா

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நான்கு மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது புதிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரியா(17), ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். அவரது வலது கால் மூட்டு சவ்வு விலகியதால் அவதிப்பட்டு வந்த பிரியாவுக்கு, பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தொடர்ந்து வலி இருந்ததால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. இந்நிலையில், சிறுநீரகம், ஈரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு, கடந்த 15-ம் தேதி பிரியா உயிரிழந்தார்.

தவறான சிகிச்சையால்தான் தனது மகள் உயிரிழந்ததாக பிரியாவின் தந்தை ரவிக்குமார் குற்றம் சாட்டினார். மேலும், இது தொடர்பாக அவர் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் (174) என்ற சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், பிரியா உயிரிழப்பு தொடர்பாக மருத்துக் கல்வி இயக்குநர் சாந்திமலர் கடந்த 17-ம் தேதி சமர்ப்பித்த அறிக்கையில், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், பிரியாவுக்கு அளிக்க வேண்டிய மருத்துவக் கவனிப்பில் ஏற்பட்ட குறைபாடே, அவரது இறப்புக்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், மயக்கவியல் மருத்துவர், பணியில் இருந்த மருத்துவ அதிகாரி, எலும்பு சிகிச்சை மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் (வார்டு ஊழியர்) ஆகிய 5 பேரின் கவனக்குறைபாடு, அலட்சியம் ஆகியவை மாணவி பிரியாவின் உயிரிழப்புக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவிலிருந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல் (304 (ஏ) என்ற புதிய பிரிவில் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாருக்கு உள்ளான 4 மருத்துவர்களில், கே.சோமசுந்தர், ஏ.பால்ராம் சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சோமசுந்தர், பால்ராம் சங்கர் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், "மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவச மானது. பல்வேறு அறுவை சிகிச்சை களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம். நாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர், தற்போது நலமுடன் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால், எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். சாட்சிகளைக் கலைக்க மாட்டோம். நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளிக்கிறோம்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, மருத்துவர்கள் தரப்பு வழக்கறிஞர் விளக்கினார். அவர், "சம்பவத்தன்று மேலும் இரு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. சிகிச்சை பெற்றவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். தற்போது விசாரணை என்ற பெயரில், மருத்துவர்களின் குடும்பத்தினரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, துன்புறுத்துகின்றனர்.

சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இருவரும் சரணடையத் தயாராக உள்ளனர். ஆனால், இந்த சம்பவம் அரசியலாக்கப்பட்டு, அச்சுறுத்தல்கள் வருகின்றன. காவல் நிலையத்துக்குச் செல்வதே ஆபத்தாக உள்ளது" என்றார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "சம்பவம் தொடர்பாக விசாரித்த மருத்துவர் குழுவின் அறிக்கையில், மருத்துவர் கள் கவனக்குறைவாக செயல் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறி, அந்த அறிக்கையை சமர்ப்பித்தார்.

தொடர்ந்து, "விசாரணை ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. மனுதாரர்கள் கவனக் குறைவாக செயல்பட்டார்களா, இல்லையா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும். இரு வாரங்களில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்கிறோம்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட மருத்துவர்கள் தரப்பு வழக்கறிஞர், "அதுவரை கைது நடவடிக்கை கூடாது என்று உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, தற்போதைய நிலையில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, வழக்கை தள்ளிவைத்தார்.

தவறுக்கு ஏற்றவாறு நடவடிக்கை: இதற்கிடையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில், கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், அனைவர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க மாட்டோம். அவரவர் தவறுக்கு ஏற்றவாறு நடவடிக்கை இருக்கும். மருத்துவத் துறை என்பது மிகப்பெரிய சேவைத் துறை. எந்த மருத்துவரும் தெரிந்தே தவறு செய்யமாட்டார். கவனக்குறைவால் தவறு நடந்துவிடுகிறது. இது தொடர்பான விசாரணை, வெளிப் படைத் தன்மையுடன் நடந்து வருகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x