Published : 28 Nov 2016 09:44 AM
Last Updated : 28 Nov 2016 09:44 AM

வாகனத் தணிக்கையின்போது காரில் சோதனை: சேலம் பாஜக பிரமுகரிடம் ரூ.20.55 லட்சம் பறிமுதல்

ரூ.18.5 லட்சத்துக்கு புதிய ரூ.2,000 நோட்டு கட்டுகள்

சேலத்தில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில், காரில் சென்ற பாஜக இளைஞர் அணி கோட்டப் பொறுப்பாளரிடம் இருந்து ரூ.20.50 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் போலீஸார் அவதிக் குள்ளாகினர்.

சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு குமாரசாமிப்பட்டி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சேலம் பாஜக இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளர் அருண் ராம் (36) காரில் வந்தார்.

அவரது காரை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தபோது, ஒரு பையில் ரூ.20 லட்சத்து 55 ஆயிரம் ரொக்கம் இருந்தது. அதில், ரூ.18 லட்சத்து 52 ஆயிரத்துக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனால், சந்தேகமடைந்த போலீஸார் அருண்ராமிடம் விசாரித்தபோது, அவர் காரணம் எதுவும் கூற மறுத்ததோடு வருமான வரித் துறையில் உரிய விளக்கம் தருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து காரில் இருந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் திங்கள் கிழமை வருமான வரித்துறையில் ஒப்ப டைக்க திட்டமிட்டனர். அதுவரை பறிமுதல் செய்த தொகையை சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத் துறையின் பாது காப்பு பெட்டகத்தில் வைக்க பணத்தை எடுத்துச் சென்றனர்.

கருவூலத்துறை அலுவலர்கள் உயர் அதிகாரி களின் அனுமதி இல்லாமல் இரவு நேரத்தில் பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியாது எனக்கூறி போலீஸாரிடம் இருந்து பணத்தை வாங்க மறுத்து விட்டனர். இதனால், நள்ளிரவு தொடங்கி விடிய விடிய போலீஸார் அங்கேயே பணத்துடன் காத்திருந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், கருவூலக பாதுகாப்பு அறையை திறக்க உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அனுமதி வேண்டும் என்று கூறினர். இதனால், நேற்றும் மதியம் வரை பணத்தை ஒப்படைக்க முடியாமல் போலீஸார் தவித்தனர்.

பின்னர் நேற்று மதியம் 3 மணியளவில், ஒரு இரும்பு பெட்டியில் பணத்தை வைத்து, அந்தப் பெட்டிக்கு சீல் வைத்து, அதன் விவ ரத்தை ஒரு தாளில் குறிப்பிட்டு கையெழுத்திட்டு, கருவூலத் துறையில் ஒப்படைத்தனர்.

அருண் ராம் சில ஆண்டுகளுக்கு முன்னர் பாமக-வில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “வழக்கமாக சோதனையில் பறிமுதல் செய்யும் பணத்தை வருமான வரித்துறையில் ஒப்படைத்து விடுவோம். விடுமுறை நாள் என்ப தால், கருவூலத்தில் பாதுகாப்பில் வைத்து, பின்னர் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தோம். ஆனால், உயர் அதிகாரிகளின் அனுமதி தேவை என்று கூறி தொகையை பெற கருவூலத் துறையினர் தயக்கம் காட்டினர். பின்னர் வருமான வரித் துறை உயரதிகாரிகள் கொடுத்த அனுமதியின் பேரில் தொகையை பெற்றுக் கொண்டனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x