Published : 18 Nov 2022 05:21 AM
Last Updated : 18 Nov 2022 05:21 AM

காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து முதல் குழு பயணம் - ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து வழியனுப்பினார்

சென்னை: காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து நேற்று ரயிலில் புறப்பட்ட 216 பேர் கொண்ட முதல் குழுவை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

மத்திய அரசு சார்பில் ‘ஒரே பாரதம் - உன்னத பாரதம்’ இயக்கத்தின்கீழ், தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள வரலாற்று தொடர்பை எடுத்துரைக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி நவ.17 முதல் டிச.16-ம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. இவ்விழாவை முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவ.19) தொடங்கிவைக்கிறார்.

தமிழகத்திலிருந்து காசிக்கு இந்திய ரயில்வே மொத்தம் 13 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 592 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள். இந்த பிரதிநிதிகள் ராமேசுவரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து தங்களின் பயணத்தை தொடங்குவார்கள்.

தமிழகத்தில் இருந்து 216 பேர் கொண்ட முதல் குழு நேற்று ரயிலில்காசிக்கு புறப்பட்டது. நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் புறப்பட்ட அந்த ரயில் நேற்று பிற்பகல் 12.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ரயிலில் உடன் வந்து எழும்பூரில் இறங்கினர்.

அந்த ரயிலின் சிறப்பு பெட்டிகளில் காசிக்கு பயணித்த தமிழக மாணவர்களை பாஜகவினர் வரவேற்று, அவர்களுக்கு உணவு வழங்கினர். சென்னையில் இருந்து 78 மாணவர்களும் அந்த ரயிலில் ஏறினர். பின்னர் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்ட அந்த ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் ரவி கூறியதாவது:

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு இருந்துள்ளது. சங்க இலக்கியங்களில்கூட காசி பற்றிய குறிப்புகள் உள்ளன. காசியில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் கோயில் இருக்கிறது. அங்குள்ள மக்கள் மிகநன்றாக தமிழ் பேசுகிறார்கள். காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான தூரம் அதிகம் என்பது புவியியல் ரீதியில்தான், மனரீதியில் அல்ல. காசியை தரிசிக்க வேண்டும்என்று கனவு காணும் மக்களுக்குஒரு மாத காலம் நடைபெறவுள்ள காசி தமிழ்ச் சங்கமம் விழா பேருதவியாக இருக்கும். இந்த பயணம் புதியது அல்ல. நீண்ட காலமாக மறக்கப்பட்ட ஒன்றை மீண்டும் அறிமுகம் செய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, ‘‘மத்திய கல்வி அமைச்சகம், சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மிகப்பெரிய கலாச்சார பகிர்தலை ஒரு மாத காலத்துக்கு காசியில் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலாவது குழுவினர், ராமேசுவரத்தில் இருந்து காசி (வாரணாசி) வரை இந்த ரயிலில் செல்கின்றனர்’’ என்றார்.

2-வது குழு 20-ம் தேதி பயணம்: காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்பதற்காக 2-வது குழு நவ.20 அதிகாலை 4.40 மணியளவில் கோவை ரயில் நிலையத்திலிருந்தும், 3-வதுகுழு நவ.22 காலை 9.15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும், 4-வது குழுநவ.23 நள்ளிரவு 11.55 மணியளவில்ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்தும், 5-வது குழு நவ.27 அதிகாலை 4.40 மணிக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்தும், 6-வதுகுழு நவ.29 காலை 9.15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்தும், 7-வது குழுநவ.30 நள்ளிரவு 11.55 மணிக்குராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்தும் புறப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x