Published : 16 Nov 2022 03:30 PM
Last Updated : 16 Nov 2022 03:30 PM

“இத்தனை காலம் பணிபுரிந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு தேர்வு எழுதுவதில் என்ன பிரச்சினை?” - பொன்முடி

அமைச்சர் பொன்முடி | கோப்புப்படம்

சென்னை: "இவ்வளவு காலமாக ஆசிரியர்களாக இருந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு தேர்வு எழுதுவதில் என்ன பிரச்சினை?” என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுடன் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர்
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் கல்லூரிகளில் வகுப்பு நடத்தும் திட்டத்தை கொண்டுவந்தது திமுக அரசுதான். மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில்தான் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 23-ம் தேதி கல்லூரி துணை வேந்தர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தை உயர் கல்வி துறைதான் நடத்துகிறது. சார்பு வேந்தர் (Pro Chancellor) என்ற அடிப்படையில்தான் இந்தக் கூட்டத்தை நான் நடத்துகிறேன்.

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, ஆய்வுக்கூட வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதற்காக தமிழக முதல்வர் ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளார். கல்லூரிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து இன்று கல்லூரி முதல்வர்களுடன் உடனான ஆலோசனையில் கலந்துரையாடி உள்ளோம். கல்லூரிகளில் உள்ள குறைகள் விரைவில் சரிசெய்யப்படும்" என்றார்.

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான டிஆர்பி தேர்வு குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு, "4000 பணியிடங்களுக்கான அந்தத் தேர்வில் கவுரவ விரிவுரையாளர்களும் கலந்துகொள்ளலாம். கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் வருடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம், ஏழரை ஆண்டுகள் பணி அனுபவமுள்ள கவுரவ விரிவுரையாளர்களாக இருந்தால் 30 மதிப்பெண்களுக்கான நேர்முகத் தேர்வில் 15 மதிப்பெண்கள் முழுமையாக கொடுக்கப்படும். நேர்முகத் தேர்வின் மொத்த மதிப்பெண்களே 30 தான்.

இவ்வளவு காலமாக ஆசிரியர்களாக இருந்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு என்ன பிரச்சினை? என்னிடம்கூட டிஆர்பி தேர்வு குறித்து சிலர் பேசினர். அவர்களிடம் தேர்வு எழுதும்படி நான் சொல்லிவிட்டேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x