Published : 16 Nov 2022 12:05 PM
Last Updated : 16 Nov 2022 12:05 PM

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மக்கள் விரோத ஆட்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு

கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

கடலூர்: "தமிழகத்தில் மக்கள்விரோத ஆட்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்துகொண்டிருக்கிறது. ஏழைகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அதிமுக உங்களுக்கு துணை நிற்கும், சேவை செய்யும்" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பபாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் வல்லம்படுகை பகுதியில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (புதன் கிழமை) ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் பேசுகையில், " அம்மா இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது. அதேபோல் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் அப்படித்தான். இன்றைக்கு ஒரு பவுன் 38 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் திருமண வயதை எட்டும்போது, பொருளாதார நிலையின் காரணமாக திருமணம் தடைபடுகிறது. அதுபோல் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்குப் பார்வையுடன் ரூ. 25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் உதவித்தொகை மற்றும் தாலிக்கு ஒருபவுன் தங்கம் என்ற திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது.

தமிழகத்தில் மக்கள்விரோத ஆட்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்துகொண்டிருக்கிறது. ஏழைகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அதிமுக உங்களுக்கு துணை நிற்கும், சேவை செய்யும்" என்று அவர் பேசினார்.

அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமையன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x