Published : 16 Nov 2022 06:43 AM
Last Updated : 16 Nov 2022 06:43 AM

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதில் முறைகேடு? - பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளது

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கட்டுவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால், மேல் நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்களுக்கான புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்ட 2019-20-ம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படவில்லை. முந்தைய அரசு ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் என தனித்தனியாக அரசாணைகளை பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 11 மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகளை கட்டியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. தொடர்புடைய துறையின் முன்னாள் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு பெரும் தொகையை, கல்லூரிகளை கட்டிய நிறுவனம் லஞ்சமாக வழங்கியுள்ளது.

குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்காக 1 லட்சத்து 77,482 சதுர அடி கட்டிடம் கட்டப்படாமல் பொதுமக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் சுரண்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான அரசாணையில் எவ்வளவு சதுர அடிக்கு கட்டுமானம் மேற்கொள்ளப்பட உள்ளது என்ற விவரமே இல்லை. பொதுப்பணித்துறை 11 லட்சத்து 23,510 சதுர அடிக்கு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. ஆனால், ஒப்பந்தத்தில் 10 லட்சத்து 32,213 சதுர அடி மட்டுமே உள்ளது. இதேபோல எஞ்சிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளது.

கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய முதல்வர் மற்றும் துறை அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை கூட்டணி அமைத்து சதி செய்து கோடிக்கணக்கான தொகையை முறைகேடு செய்துள்ளன. குறிப்பாக, பொதுப்பணித்துறையை கவனித்து வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் (கட்டுமானம்) ராஜமோகன், முன்னாள் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய மருத்துவக் கவுன்சில் செயலாளர் ஆர்.கே.வாட்ஸ் ஆகியோருக்கு இந்த முறைகேட்டில் முக்கியப்பங்கு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் 2021 ஜூலை 7-ல் புகார் செய்தும் எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை. மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு உண்டு என்பதால், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி வி.சிவஞானம் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “மனுதாரர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது. முன்னாள் முதல்வரான பழனிசாமி, தற்போது எதிர்கட்சித் தலைவராக பதவி வகிப்பதால் இதுதொடர்பாக மேல் விசாரணை செய்ய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. எனவே, அரசின் ஒப்புதலுக்காக இதுதொடர்பான ஆவணங்கள் ஊழல் கண்காணிப்புத் துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தார். அதையடுத்து நீதிபதி, “மாநில காவல்துறையே இந்த முறைகேடு புகார் குறித்து விசாரித்து வருவதாக கூறுவதால், தற்போதைக்கு சிபிஐ விசாரணை கோர வேண்டிய அவசியமில்லை” எனக் கூறி விசாரணையை டிச.20-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x