Published : 16 Nov 2022 06:18 AM
Last Updated : 16 Nov 2022 06:18 AM

இன்னும் நான்கு நாட்களில் திருவிழா: கால்பந்து சுவாரஸ்யங்கள்...

1.73 லட்சம் ரசிகர்கள் படை…: 1950-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரேசில்–உருகுவே அணிகள் மோதின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை 1,73,850 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் அதிக அளவிலான ரசிகர்கள் பார்வையிட்ட போட்டி இதுதான். எனினும் இந்த ஆட்டத்தை சுமார் 1,99,854 முதல் 2 லட்சம் பேர் வரை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆட்டத்தில் பிரேசில் தோல்வியடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் பலர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறின.

அதிக வெற்றிகளை குவித்த பீலே: உலகக் கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற பெருமையை பிரேசில் ஜாம்பவான் பீலே பெற்றுள்ளார். பீலே தனது முதல் உலகக் கோப்பையை 1958-ல் ஸ்வீடனில் வென்றார், இது பிரேசிலின் முதல் வெற்றி கோப்பையாகும். பின்னர் 1962-ல் பிரேசில் வெற்றிபெற உதவினார், இறுதியாக 1970-ல் தனது அணியை வெற்றி மேடைக்கு அழைத்துச் சென்றார், அதுவே அவரது இறுதிப் போட்டியாகவும் அமைந்தது.

கோல்களின் மன்னன்...: உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்ளோஸ் பெற்றுள்ளார். மிரோஸ்லாவ் க்ளோஸ் 16கோல்கள் அடித்து பிரேசிலின் ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார். அவர் 2002ல் தனது அறிமுக சீசனில் ஐந்து கோல்களை அடித்தார், பின்னர் 2006 போட்டியில் மீண்டும் ஐந்து கோல்களை அடித்தார், அதற்காக அவர் கோல்டன் பூட் விருது வென்றார். பின்னர் 2010-ம் ஆண்டு 4 கோல்களும், 2014 சீசனில் 2 கோல்களும் அடித்தார்.

ஒரே தொடரில் 13 கோல்கள்….: உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக கோல்கள் அடித்த சாதனை பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் வசம் உள்ளது. 1958-ம்ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற தொடரில் ஜஸ்ட் ஃபோன்டைன் 13 கோல்கள் அடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x