Published : 13 Nov 2022 04:44 AM
Last Updated : 13 Nov 2022 04:44 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து நளினி உட்பட 6 பேரும் விடுதலை: திருச்சி சிறப்பு முகாமுக்கு முருகன், சாந்தன் மாற்றம்

சாந்தன்

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் சிறையில்இருந்து நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ல்தேர்தல் பிரச்சாரத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ம் ஆண்டு ஜன. 28-ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டனர். தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரின் தூக்குதண்டனை ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது. இதில், நளினியின் தூக்கு தண்டனை 2000-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிடப்பட்டது.

நளினி விடுதலை: உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் நேற்று முன்தினம் உத்தரவிட்டனர். இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பரோலில் இருந்தநளினி, போலீஸார் பாதுகாப்புடன் வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கு நேற்று மாலை 4 மணியளவில் திரும்பினார். அங்கு விடுதலைக்கான ஆவணங்களில் கையெழுத்திட்ட நளினி, 30 ஆண்டுகளுக்கு மேலானசிறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு வெளியே வந்தார்.

சிறை வளாகத்தில் இருந்த சகோதரர் பாக்யநாதனுடன் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள கணவர் முருகனை நளினி கண்ணீர்மல்க சந்தித்தார். அவருக்கு ஆறுதல் தெரிவித்த முருகன், சாந்தனுடன் திருச்சி சிறப்பு முகாமுக்கு புறப்பட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நளினி ‘விடுதலை மகிழ்ச்சி’ என்று மட்டும் தெரிவித்தார்.

திருச்சி முகாமுக்கு மாற்றம்: இந்த வழக்கில் நளினி மற்றும் ரவிச்சந்திரனை தவிர முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அனைவரும் விடுதலை செய்யப்பட்டாலும் இந்தியாவில் அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் நேற்று இரவு திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

வேலூர் மத்திய சிறையில் பெண் அதிகாரியிடம் முருகன் ஆபாசமாக நடந்துகொண்டதாக பதியப்பட்ட வழக்கின் விசாரணை வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக, அவர் திருச்சி முகாமில் இருந்து அழைத்து வரப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்படும் 4 பேரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப ‘க்யூ'பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக, சென்னையில் உள்ள வெளிநாட்டினருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க தேவையான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து புகைப்படமும் எடுத்துள்ளனர்.

மதுரையில் ரவிச்சந்திரன்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன், 1992-ல் இருந்து மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பரில் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த ஒரு ஆண்டாக பரோலில் இருந்து வருகிறார்.

தற்போது விடுதலை செய்யப்பட்டதையடுத்து, அருப்புக்கோட்டையில் இருந்த ரவிச்சந்திரன் நேற்று இரவு மதுரை மத்திய சிறைக்கு சென்றார். பின்னர் நடைமுறைகளை முடித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ரவிச்சந்திரனை அவரது வழக்கறிஞர் திருமுருகன் மற்றும் எழுவர் விடுதலை பேரவையை சேர்ந்த திலீபன் செந்தில் உள்ளிட்டோர் வரவேற்றனர். சிறையில் வேலை பார்த்து ஈட்டிய ஊதியம் ரூ.20 ஆயிரத்தை ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக ரவிச்சந்திரன் வழங்கினார்.

குடும்ப தலைவியாக இருப்பேன்: நளினி - காட்பாடியில் உள்ள வீட்டில் செய்தியாளர்களிடம் நளினி கூறும்போது, ‘‘எங்களை மறக்காமல் இருந்த தமிழ் உணர்வுள்ளவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். எங்களுக்கு உதவி செய்த எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய, மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது கணவர் என்னுடன் இப்போது இல்லை என்பது வருத்தமாக உள்ளது. தமிழ் மக்கள் 32 ஆண்டுகள் எங்கள் பின்னால் நின்று ஆதரவு கொடுத்துள்ளனர். நான் பொது வாழ்க்கைக்கு வர விரும்பவில்லை. ஒரு குடும்பத் தலைவியாக எனது கணவர், எனது மகள் என இருக்கப் போகிறேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x