Published : 13 Nov 2022 04:02 AM
Last Updated : 13 Nov 2022 04:02 AM

சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை - 40 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் மூழ்கின

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதி பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் வயல்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்தது. சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில், 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சீர்காழி அருகேயுள்ள உப்பனாற்றின் கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, சூரக்காடு, தென்பாதி, சட்டநாதபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் மழைநீரால் சூழப்பட்டன. திருமுல்லைவாசல்- பழையாறு சாலையில், தொடுவாய் என்ற பகுதியில் பாலம் உள்வாங்கியதால் சாலை துண்டிக்கப்பட்டது. மேலும், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்ததால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இடி, மின்னல் காரணமாக 10-க்கும் அதிகமான டிரான்ஸ்ஃபார்மர்கள் வெடித்துவிட்டதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் பகுதிகளில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

சீர்காழி-பூம்புகார் சாலையில், திருவாலி முதல் நாராயணபுரம் வரை யிலான சாலை நீரில் மூழ்கியது.

பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகு மற்றும் 6 ஃபைபர் படகுகள், திருமுல்லைவாசல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகு ஆகியவை கடலில் மூழ்கின.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், சீர்காழி சட்டைநாதர் கோயில்களுக்குள் மழைநீர் தேங்கியது. கனமழையால் சீர்காழி, பூம்புகார் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மழை பாதிப்புகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x