Published : 12 Nov 2022 09:55 PM
Last Updated : 12 Nov 2022 09:55 PM

சிறுத்தை இறந்த வழக்கில் வனத்துறையிடம் தேனி எம்.பி. ரவீந்திரநாத் நேரில் ஆஜர்

தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை இறந்தது தொடர்பான வழக்கில் இன்று அவர் வனத்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகே சொர்க்கவனம் பகுதியில் தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத்திற்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு கடந்த செப்.28-ம் தேதி மின்வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. வாயில் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்த சிறுத்தை குறித்து பலரும் சந்தேகம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அத்தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன், தோட்ட மேலாளர்கள் ராஜவேல், தங்கவேல் ஆகியோரை வனத்துறையினர் அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும் எம்பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டது. முதல் சம்மனுக்கு அவரது வழக்கறிஞர்கள் குழுவினர் வந்து விளக்கம் அளித்தனர். இந்நிலையில் இரண்டாவது சம்மனுக்கு ப.ரவீந்திரநாத் இன்று ஆஜரானார்.

தேனி வனச்சரகரக அலுவலகத்தில் உதவி வன பாதுகாவலர் ஷர்மிளி விசாரணை நடத்தினார். இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. அவரின் பதில்கள், விளக்கங்கள் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “வனத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். மீண்டும் விசாரணைக்கு எப்போதும் அழைத்தாலும் ஆஜராக தயாராக இருக்கிறேன்.

சிறுத்தை இறப்பில் உள்ள சந்தேகங்களை வனத்துறை தெளிவுபடுத்த வேண்டும். இந்த வழக்கில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை. வன விலங்குகள் உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளரை விசாரிப்பது வழக்கம். அதனடிப்படையில் விசாரணைக்கு என்னை அழைத்தார்கள். உரிய விசாரணை நடத்தி உன்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x