Published : 09 Nov 2022 10:52 PM
Last Updated : 09 Nov 2022 10:52 PM

மதுரை | இருசக்கர வாகனங்களை நிறுத்த இடவசதியில்லை - அரசு மருத்துவமனை ‘பார்க்கிங்’ ஆக மாறிய பனங்கல் சாலை

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதியின்மையால், மருத்துவமனை அமைந்துள்ள பனங்கல் சாலை ‘பார்க்கிங்’ ஆக மாறியுள்ளது. நெரிசல் மிகுந்த சாலையில் இந்த ‘பார்க்கிங்’ காரணமாக முக்கியமான நேரங்களில் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பனங்கல் சாலையில் உள்ளது. இந்த மருத்துவமனை ஒரே இடத்தில் இல்லாமல் கோரிப்பாளையத்தில் பழைய மருத்துவமனை கட்டிடமும், அண்ணா பஸ் நிலையத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடமும், மருத்துக் கல்லூரி மைதானத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடமும் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைகளுகக்கு தினமும் வெளிநோயாளிகள் 13,000 பேரும் உள்நோயாளிகள் 3,500 பேரும் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் உறவினர்கள், பார்வையாளர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகிறார்கள். இவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு மருத்துவ கட்டிடங்களிலும் போதுமான இடவசதியில்லை. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒரளவு போதுமான பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு கட்டிடப் பிரிவுகளிலும் வாகனங்களை நிறுத்த இடவசதியில்லாமல் நோயாளிகள், பார்வையாளர்கள், தங்கள் வாகனங்களை சாலையிலே நிறுத்தி செல்கின்றனர்.

மருத்துவமனை வளாகத்திலும் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்துகிறார்கள். ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தும்போது நோயாளிகள், பார்வையாளர்களுக்கும், மருத்துவமனை செக்கியூரிட்டிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படுகிறது. அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் கார், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மருத்துவமனை கட்டிடத்தின் கீழ் பகுதியில் ‘அன்டர் கிரவுண்ட்’ பார்க்கிங் வசதி உள்ளது.

ஆனால், இந்த சிகிச்சைப் பிரிவுக்கு வரும் அனைவரும் இருசக்கர வாகனங்களையும் நிறுத்துவதற்கு அந்த ‘பார்க்கிங்’கில் இடவசதியில்லை. மருத்துவமனையிலே விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவுக்குதான் நோயாளிகள், அவர்களை அழைத்து வரும் உறவினர்கள், பார்க்க வரும் பார்வையாளர்கள் அதிகம் வருகிறார்கள். அதனால், இவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த வசதியில்லாமல் மருத்துவமனை முன் பனங்கல் சாலையிலே நிறுத்தி செல்கிறார்கள். பனங்கல் சாலை ஏற்கனவே ஒருபுறம் ஆம்புலன்ஸ்கள், நடைபாதைகள் ஆக்கிரமிப்பிப்பாலும், மற்றொருபுறம் மருத்துவமனைக்கு வருவோர் வாகனங்களை ‘பார்க்கிங்’ செய்வதாலும் தினமும் போக்குவரத்து ஸதம்பித்த நிலையில் இருக்கும். மருத்துவமனையில் போதுமான பார்க்கிங் வசதியில்லாததால் போக்குவரத்து போலீஸாரால் இந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியவில்லை.

மருத்துவமனையில் தொடர்ந்து புதிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. ஆனால், அந்த கட்டிடத்திற்கு ஏற்ற பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுவதில்லை. தற்போது கூட ரூ.150 கோடியில் கோரிப்பாளையம் பழைய மருத்துவக் கட்டிடப்பகுதியில் 7 அடுக்கு மாடியுடன் கூடிய மருத்துவ சிகிச்சைப்பிரிவு, ஆய்வக்கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டிடத்திற்கான பார்க்கிங் வசதியை சேர்த்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுபோல், அண்ணா பஸ் நிலையம் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு வருவோர் வாகனங்களை நிறுத்துவதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுதொடர்பாக மருத்துவமனை உயர் அதிகாரிகளிடம் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அண்ணா பஸ் நிலையம் விபத்து அவசர சிகிச்சைப்பிரிவு கட்டிட அன்டர் கிரவுண்ட் ‘பார்க்கிங்’கில் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு மட்டுமே இடவசதி உள்ளது. நோயாளிகள், பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு மருத்துவமனை வளாகத்தில் முற்றிலும் இடவசதியில்லை. மாவட்ட நிர்வாகம்தான் வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மருத்துவப்பிரிவின் குறிப்பிட்ட முக்கிய பிரிவுகளை புறநகர் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x