Published : 07 Nov 2022 07:46 AM
Last Updated : 07 Nov 2022 07:46 AM

ஆளுநரை திரும்ப பெற கோரும் விவகாரத்தில் குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டம்: திமுக எம்பி கனிமொழி தகவல்

சென்னை: தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரும் விவகாரத்தில் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட உள்ளதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். அன்பின் பாதை அறக்கட்டளை சார்பில் ‘எங்கள் மயிலாப்பூர்’ எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்- ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில்சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அவர் பேசியதாவது:

இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 2-ம்ஆண்டாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் மிக பழமையான கோயில், தேவாலயம், மசூதிகள் உள்ளன. மறுபுறம் சிட்டி சென்டர், திரையரங்குகள் காணப்படுகின்றன. பழமை, புதுமை என எல்லாம் இருக்கும் ஒரே இடம் மயிலாப்பூர்தான். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறன்கள் உள்ளன. அதை கண்டறிந்து ஆர்வமுள்ள செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில் திமுக எம்எல்ஏ த.வேலு, எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரி தாளாளர் குமார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன்பின் கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவியைதிரும்பப் பெறும் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அனுமதி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜகஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் வேண்டுமென்றே அங்குள்ள ஆளும் கட்சிகளுக்கு தொடர்ந்து பிரச்சினைகள் தந்து வருகின்றனர்.

பல்வேறு நேரங்களில் மரபுகளை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொச்சைப்படுத்தும் விதமாக ஆளுநர்கள் பேசுகின்றனர். இது மாநில உரிமைகளை மீறுவதாகும். தற்போது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நேரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், தமிழகமுதல்வர் ஸ்டாலினும் சந்தித்துகொண்டதால் அது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x