Published : 03 Nov 2022 06:23 PM
Last Updated : 03 Nov 2022 06:23 PM

787 166 1787-க்கு அழைக்கலாம் - மதுரை மாநகராட்சியில் புதிய தொலைபேசி புகார் சேவை மையம் தொடக்கம்

மதுரையில் தொலைபேசி புகார் மையம் தொடங்கிவைத்து பேசுகிறார் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மதுரை: உங்கள் குறைகளை தீர்க்க ஒரு அழைப்பு மட்டுமே போதும் என்ற உறுதியுடன் மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய தொலைபேசி சேவையுடன் கூடிய தானியங்கி மென்பொருள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய சேவை மையத்தை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை மாநகராட்சியின் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் முகாம் மற்றும் மேயரின் சிறப்பு முகாம்களில் மனுக்கள் கொடுத்து வருகின்றனர். இதுதவிர, குடிநீர், சுகாதாரம் மற்றும் மற்ற அடிப்படை வசதிகளையும், சேவைகளையும் பெறவதற்கும், அதில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்கவும் மாநகராட்சியில் வாட்ஸஅ அப் செயலியுடன் கூடிய ஒருங்கிணைந்த புகார் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டது.

கரோனாவுக்கு பிறகு இந்த கண்காணிப்பு மையத்தின் செயல்பாடு மந்தமாக இருந்தது. பொதுமக்கள் மாநகராட்சியின் வாட்ஸ் அப் செயலி நம்பரில் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது உள்ள புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புகார்களுடன் உடனுக்குடன் தீர்வு காண்பதற்காக 'உங்கள் குறைகளை தீர்க்க ஒரு அழைப்பு மட்டுமே போதும் என்ற உறுதிமொழியுடன் புதிய தொலைபேசி சேவை மற்றும் வாட்ஸ்அப் எண் 787 166 1787 இன்று முதல் அமுலுக்கு வந்தது.

இந்த புதிய புகார் சேவை எண் மற்றும் மென்பொருள் சேவையினை அறிமுகம் செய்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர், “கவுன்சிலர்கள் இந்த புதிய புகார் எண் மற்றும் இந்த சேவை வசதியினை தங்கள் வார்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளை அழைத்து பாராட்டுவேன். அதே சமயம், பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் கவுன்சிலர்களை அதிகாரிகளிடம் வலியுறுத்தி அதற்கு தீர்வு காண உதவலாம்'' என்றார்.

மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங், துணை மேயர் நாகராஜன் துணை ஆணையர் முஜிபூர் ரகுமான், நகரப்பொறியாளர் லெட்சுமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இந்த புதிய தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் புகார் செய்தால் அந்த புகார்கள் தானியங்கி மூலம் மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகாரின் விபரங்கள் தெரிவிக்கப்படும். பெறப்பட்ட புகார்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்கப்படவில்லை எனில் அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களுக்கு புகார்கள் அனுப்பப்படும். புகார்கள் நிறைவடையவில்லை எனில் ஆணையாளரின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

பொதுமக்கள் புகார்களை அனுப்பி உடனுக்குடன் அதற்கு தீர்வு காண உதவி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி அழைப்பு மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் மற்றும் www.mducorpicts.com என்ற மதுரை மாநகராட்சி இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்கலாம். புகார் பதிவு செய்யப்பட்டவுடன் புகார் ஒப்புகை எண் ஒன்று உருவாக்கப்பட்டு பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த ஒப்புகை எண் மூலமாக புகாரின் நிலையை Online-ல் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

நிதியே இல்லை, என்னத்த சொல்ல: இன்று தொடங்கி வைக்கப்பட்ட தொலைபேசி புகார் சேவை ஏற்கெனவே இருந்ததுதான். ஆரம்பத்தில் இந்த சேவை தொடங்கியது ஏராளமான புகார்கள் குவிந்தது. ஆனால், தெருவிளக்கு பொருத்துவது, ஆக்கிரமிப்புகள் அகற்றுவது, சான்றிதழ் வழங்குவது, வரி குறைபாடுகள் உள்ளிட்ட சாதாரண பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டது. பாதாளசாக்கடை பிரச்சனை, குடிநீர் பற்றாக்குறை, சாலை வசதி உள்ளிட்டவற்றுக்கு காணப்படவில்லை. அதனால், இந்த சேவையில் பொதுமக்கள் புகார் செய்வது குறைந்து அதன்பின் முடங்கியது. தற்போது மீண்டும் புதுப்பொலிவுப்படுத்தி அதன் தொலைபேசி எண்ணை மட்டும் மாற்றி நவீனப்படுத்தி மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''மாநகராட்சியில் நிதியே இல்லை. நிதியிருந்தால்தான் மக்கள் கூறும் குறைகளுக்கு தீர்வு காணப்படும், நிதி ஒதுக்காமல் இதுபோல் சேவை தொடங்குவதால் எந்த பயனும் இல்லை'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x