Last Updated : 02 Nov, 2022 07:10 AM

 

Published : 02 Nov 2022 07:10 AM
Last Updated : 02 Nov 2022 07:10 AM

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி தொடங்காததால் மாணவர்கள் குழப்பம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறை கடந்த 2017-ம்ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனினும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதையடுத்து, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்மூலம் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 1,500 மாணவர்கள் வரை பயனடைந்துள்ளனர்.

இதற்கிடையே, அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக, கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இலவசமாக நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு, கரோனா பரவலால் இணையவழியில் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நன்கு படிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உண்டு, உறைவிட வசதியுடனும் பயிற்சி தரப்பட்டது. எனினும், கடந்த நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், பள்ளிகளில் நடப்பு ஆண்டுக்கான நீட் பயிற்சி வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அரசுப் பள்ளிகளில் இதுவரை நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘கரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனம் மூலம் இணைய வழியில் நீட் பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டில் பள்ளி ஆசிரியர்கள் மூலம் முந்தைய வழிகாட்டு கையேடுகளின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டில் நீட் பயிற்சி குறித்து எந்த அறிவுறுத்தலையும் பள்ளிக்கல்வித் துறை இதுவரை வழங்கவில்லை. அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி எப்போது தொடங்கும் என்று மாணவர்கள், பெற்றோர் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்’’ என்றனர்.

சமூக ஆர்வலர் ஆர்.செந்தில் நாதன் கூறும்போது, ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இலவச நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. சென்னை உட்பட சில மாவட்டங்களில் மட்டும் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து பிரத்யேக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தன்னார்வ அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி தருகின்றனர். ஆனால், அது போதாது. மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீட் பயிற்சிக்கான அறிகுறிகள்கூட தென்படவில்லை. கடந்த ஆண்டு முறையாக பயிற்சி தராததால்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி குறைவாக இருந்தது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் சுமார் 3 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதிலும் பலர் குறைந்த மதிப்பெண்களே பெற்றனர். அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களால் பல லட்சங்கள் செலவிட்டு, தனியார் பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க முடியாது. அரசின் 7.5 சதவீதஇடஒதுக்கீடு நல்ல பலன் தந்தாலும், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தேர்வில் நல்லமதிப்பெண் பெறவேண்டும். எனவே, தனியார் மையங்களில் வழங்கப்படுவதுபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தந்து நீட் தேர்வுக்கு அவர்களை தமிழக அரசு தயார்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x