Published : 26 Oct 2022 06:42 AM
Last Updated : 26 Oct 2022 06:42 AM

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்; தரிசு நில தொகுப்பில் பயன்பெற முன்பதிவு செய்யலாம்: விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்தாண்டு 3,204 கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நில தொகுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பயன்பெற விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிராம அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் நோக்கத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தின் நிகர சாகுபடிப் பரப்பை 11.75 லட்சம் ஹெக்டேராக உயர்த்த, 12,525 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிதல், பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிக்கு கொண்டு வருவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ், கடந்த 2021-22-ம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துகள், நடப்பு 2022-23-ல் 3,204 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தரிசு நிலத் தொகுப்பு அடிப்படையில் 10 முதல் 15 ஏக்கர் வரை உள்ள தரிசு நிலங்கள் சர்வே எண் வாரியாக கண்டறியப்படுகிறது. ஒரு கிராமத்தில் மிக அதிகமாக தரிசு நிலங்கள் இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் அமைக்கலாம். 10 ஏக்கருக்குக் குறைவாக தரிசு நிலங்களை தனியாகக் கணக்கெடுத்து, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தண்ணீர் வசதி ஏற்படுத்துதல்: தரிசு நிலத்தொகுப்பில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, ஒரு குழுவாக உருவாக்கி, அக்குழு பதிவு செய்யப்படுகிறது. வேளாண் பொறியியல் துறை மூலம் நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் தரிசு நிலத் தொகுப்பிலோ அல்லது அருகில் உள்ள புறம்போக்கு நிலத்திலோ ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறு அமைக்கப்படுகிறது. நீரை இறைக்க சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் அல்லது மின் சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்புசெட்களும் அமைத்து தரப்படுகிறது. இதுவரை, 1,997 கிராமப் பஞ்சாயத்துகளில் 980 தரிசு நிலத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டு, ஆழ்துளை அல்லது குழாய் அல்லது திறந்தவெளிக் கிணறுகள் 656 தரிசு நிலத் தொகுப்புகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, 428 இடங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன.இந்த செலவு அரசால் ஏற்கப்படுகிறது.

தொகுப்பு நிலங்களில் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் தரக்கூடிய வகையில், குறைந்த நீரில் அதிக வருமானம் தரக்கூடிய தோட்டக்கலை பழ மரப்பயிர்களும், ஊடுபயிராக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களையும் சாகுபடி செய்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது. திட்டக் கிராமங்களில் உள்ள ஏரி, குளம், வரத்து கால்வாய்களை தூர்வாருதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் மின் இணைப்புடன் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் போன்ற பணிகளும் 100 சதவீத மானியத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டத்தில் முதல்கட்டமாக தேர்வாகியுள்ள, 1,997 கிராமப் பஞ்சாயத்துகளிலும் இப்பணிகளை மேற்கொள்ள மாநில நிதியிலிருந்து ரூ.227.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமம்தோறும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலரிடம் திட்டம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த நிதியாண்டில், 3,204 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்திட கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலத் தொகுப்பு அமைத்தல் உள்ளிட்ட ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி அல்லது www.tnagrisnet.tn.gov.in அல்லது www.tnhorticulture.tn.gov.in அல்லது www.mis.aed.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமும் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x