Published : 26 Oct 2022 04:52 AM
Last Updated : 26 Oct 2022 04:52 AM

முதல் இந்து பிரதமர், இந்திய மருமகன் - இங்கிலாந்து பிரதமராக ரிஷி பதவியேற்பு

இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸை, ரிஷி சுனக் நேற்று சந்தித்தார். அப்போது அந்நாட்டின் 57-வது பிரதமராக ரிஷி பதவியேற்றுக் கொண்டார். படம்: பிடிஐ

லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் 57-வது பிரதமராக நேற்று பதவியேற்றார். முதல் இந்து பிரதமர், வெள்ளையினத்தை சாராத முதல் பிரதமர், முதல் இந்திய வம்சாவளி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை அவர் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக இருந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த தலைவர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமராக லிஸ் ட்ரஸ் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி பதவியேற்றார். சமீபத்தில் அவர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டால் இங்கிலாந்தின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி அமைச்சர் க்வாசி க்வார்டெங்க், உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன், கட்சியின் தலைமை கொறடா வெண்டி மார்டன் உள்ளிட்டோர் ராஜினாமா செய்தனர். நெருக்கடி முற்றியதால், லிஸ் ட்ரஸ் கடந்த 20-ம் தேதி பதவி விலகினார்.

புதிய பிரதமரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியில் மீண்டும் உட்கட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கின. கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு அளித்தனர். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் அமைச்சர் பென்னி மார்டென்ட் ஆகியோரும் போட்டியிடப் போவதாக அறிவித்தனர். இதனால், 3 பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் பென்னிக்கு 24 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே கிடைத்ததால், அவர் போட்டியில் இருந்து விலகி, ரிஷிக்கு ஆதரவு அளித்தார்.

போட்டியின்றி தேர்வு

100 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக போரிஸ் ஜான்சன் கூறி வந்தார். ஆனால், 56 பேர் மட்டுமே வெளிப்படையாக அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மற்றவர்கள் மவுனம் காத்ததால், அவரும் போட்டியில் இருந்து விலகினார். 2 போட்டியாளர்களும் விலகிய நிலையில் நேற்று முன்தினம் நடந்த கன்சர்வேட்டிவ் கட்சிக் கூட்டத்தில், இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு நேற்று சென்ற பிரதமர் லிஸ் ட்ரஸ், தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை மன்னர் 3-ம் சார்லஸிடம் அளித்தார். இதை மன்னர் ஏற்றுக்கொண்டார்

பின்னர், பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் 3-ம் சார்லஸை ரிஷி சுனக் சந்தித் தார். இங்கிலாந்தின் 57-வது பிரதமராக அவர் பதவியேற்றுக் கொண்டார்.

இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமர், வெள்ளையினத்தை சாராத முதல் பிரதமர், முதல் இந்திய வம்சாவளி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை ரிஷி சுனக் பெற்றுள்ளார். இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனான ரிஷி, இளம் வயதில் (42) பிரதமராகி, கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x