Published : 20 Oct 2022 03:51 PM
Last Updated : 20 Oct 2022 03:51 PM

சிவகாசியில் தீபாவளி இறுதிக்கட்ட பட்டாசு விற்பனை விறுவிறுப்பு: பிற மாவட்ட மக்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்

சிவகாசி - சாத்தூர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்

சிவகாசி: தீபாவளியையொட்டி சிவகாசி பட்டாசு கடைகளில் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வாகனங்களில் வந்து பட்டாசுகளை வாங்குவதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு விற்பனைக் கடைகளில் விற்பனை மும்முர மடைந்துள்ளது.

இங்கு பட்டாசு உற்பத்தி ஆலைகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள நேரடி கடைகள் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனைக் கடைகளில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.

பல கடைகளில் 30 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. விலை குறைவு, புதிய மற்றும் பல வகையான பட்டாசுகளை நேரடியாகத் தேர்வு செய்தும் வாங்கலாம் என்பதால், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமானோர் நேரடியாக வந்து பட்டாசு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். பட்டாசுகளை பேருந்து மற்றும் ரயிலில் எடுத்துச் செல்ல அரசு தடை விதித்துள்ளதால் சிவகாசிக்கு பட்டாசு வாங்க வருவோர் தங்களின் சொந்த வாகனங்களிலும், நண்பர்களுடன் சேர்ந்து வாடகை வாகனங்களிலும் வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந் தோர் அதிக அளவில் வந்து பட்டாசுகளை வாங்குகின்றனர்.இதன் காரணமாக சிவகாசியில் உள்ள விருதுநகர் சாலை, சாத்தூர் சாலை, வெம்பக்கோட்டை சாலை, காரனேஷன் சந்திப்பு, பஜார் வீதி, சிவன் கோயில் ரத வீதிகள், காந்தி சாலை, விஸ்வநத்தம் சாலை, நாரணாபுரம், செங்கமலநாச்சி யார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சிவகாசி டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் 125-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சாதாரண நாட்களில் மாலை நேரத்திலும், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நாள் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x